பிரதமர் நரேந்திர மோடி, மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் முதல் சிந்தன் ஷிவிர் அமர்வு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.28) காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
அப்போது, நாடு முழுவதும் உள்ள போலீஸ் படைகளுக்கு ஒரே சீருடை என்ற யோசனையை முன்வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், “காவல்துறையினருக்கான ‘ஒரே நாடு, ஒரே சீருடை’ என்பது ஒரு யோசனை மட்டுமே. நான் அதை உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை.
சற்று சிந்தித்து பாருங்கள், இது 5, 50 அல்லது 100 வருடங்களில் நடக்கலாம். அனைத்து மாநிலங்களும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்றார்.
பின்னர், நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “நாட்டுக்கு முக்கியமான பிரச்சினை ஒன்று உள்ளது. தற்போது நம் நாட்டில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ அட்டை உள்ளது.
அதேபோல் ஒரே நாடு ஒரே சீருடை திட்டத்தை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இது, ஒரு பொதுவான அடையாளத்தை வழங்கும், ஏனெனில் குடிமக்கள் நாட்டில் எங்கும் காவல்துறை அதிகாரிகளை அங்கீகரிப்பார்கள்.
ஒரு தனி அடையாளத்தைக் கொண்ட தபால் பெட்டி இருப்பதைப் போல, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக போலீஸ் சீருடைகள் அடையாளம் காணப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “இதை உங்கள் கருத்தில் ஒரு சிந்தனையாகவே முன்வைக்கிறேன். இது கூடுதல் உதவியை வழங்கும் மற்றும் மாநிலங்கள் தங்கள் எண் அல்லது அடையாளத்தை வைத்திருக்க முடியும்” என்றார்.
தொடர்ந்து பயங்கரவாத பரவலை அழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு அரசாங்கமும் அதன் சொந்தத் திறனுடனும் புரிதலுடனும் அதன் பங்கைச் செய்ய முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர், “ஒன்றாக ஒன்றிணைந்து நிலைமையைக் கையாள்வது காலத்தின் தேவை. நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதைத் தடுக்க, நக்சலிசத்தின் ஒவ்வொரு வடிவமும், அது துப்பாக்கி ஏந்தியதாக இருந்தாலும் சரி, பேனாவை வைத்திருந்ததாக இருந்தாலும் சரி, வேரோடு பிடுங்கப்பட வேண்டும்,'' என்றார்.
மேலும், இதுபோன்ற சக்திகள், வரும் தலைமுறையினரின் மனதை சிதைக்கும் வகையில் தங்களது அறிவுத் துறையை அதிகரித்து வருவதாக மோடி கூறினார்.
தொடர்ந்து, “தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும், சர்தார் படேலின் உத்வேகத்திற்காகவும், நம் நாட்டில் இதுபோன்ற எந்த சக்திகளையும் வளர அனுமதிக்க முடியாது. இத்தகைய சக்திகளுக்கு சர்வதேச அளவில் கணிசமான உதவி கிடைக்கிறது” என்றார்.
பின்னர், கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டில் நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக வியாழக்கிழமை (அக்.27) தொடக்க உரை ஆற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “குற்றங்களை எதிர்த்துப் போராட மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும். தேசிய, மாநில அல்லது பிராந்திய எல்லைகளுக்குள் நடக்கும் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது நமது கூட்டுப் பொறுப்பு.
UAPA போன்ற சட்டங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு தீர்க்கமான போரில் அமைப்புக்கு பலத்தை அளித்துள்ளன” என்றார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்கள் பற்றி பேசிய நரேந்திர மோடி இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.
அப்போது, “இடஒதுக்கீடு பற்றிய போலிச் செய்திகளால் வன்முறைகள் நடந்தன.
இதை நாமும் பார்த்தோம். இது சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பினாலும், நஷ்டம் ஏற்பட்டது. ஆகவே எந்தச் செய்தியாக இருந்தாலும் குறைந்தது 10 ஆவணங்களையாவது சேகரித்து அதன்பின்னர் பகிருங்கள்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.