scorecardresearch

கேரளாவில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலியான சோகம்

கேரளா மலப்புரம் அருகே உள்ள தூவல் திரம் ஓதுபுரம் கடற்கரையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Kerala
Kerala

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் கடற்கரை பகுதியில் நேற்று (மே 7) மாலை எதிர்பாராத விதமாக இரட்டை அடுக்கு சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். படகில் அதிக நபர்களை ஏற்றிக் கொண்டு சென்றதாகவும், பெரும்பாலான பயணிகளிடம் பாதுகாப்பு உடை எதுவும் இல்லை என்றும் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், இரவு 7.30 மணியளவில் தனுராவுக்கு அருகிலுள்ள தூவல் திரம் ஓதுபுரம் கடற்கரையில் (Thooval Theeram Ottupuram beach) இந்த சம்பவம் நடைபெற்றது எனக் கூறினர்.

காவல்துறையினர் கூறுகையில், தனியார் நிறுவனத்தால் அங்கு படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் கடலில் படகு இயக்க அனுமதி இல்லை, ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் விதிகளை மீறி படகை இயக்கியுள்ளனர். விபத்துக்குள்ளான படகில் 35-40 பயணிகள் இருந்துள்ளனர். தேசிய பேரிடம் மீட்பு படையின் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினர்.

முதல்வர் பினராயி விஜயன் இன்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு விபத்து நடைபெற்ற தனூருக்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிடுகிறார்.

விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவரான ரஃபீக் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடற்கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பூரப்புழா ஆற்றின் முகத்துவாரம் அருகே படகு கவிழ்ந்தது. பெரும்பாலான பயணிகளிடம் பாதுகாப்பு உடை இல்லை. விபத்து நடந்தபோது அருகில் படகு ஏதும் இல்லாததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது எனக் கூறினார்.

குற்றச்சாட்டு

சம்பவ இடத்திற்கு வந்த ஐ.யு.எம்.எல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ஏ மஜீத், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து புகார் அளித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், கடற்கரையில் முக்கியமாக மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும். சமீபத்தில் தான் இங்கு சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் படகு சேவையை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

மோடி இரங்கல்

விபத்து குறித்து ஜனாதிபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்று கூறினார்.

முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனூர் படகு விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: At least 22 drown as double decker boat capsizes in kerala

Best of Express