”இந்துக்கள் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும், நிறுத்தக்கூடாது”: பாஜக எம்எல்ஏ சர்ச்சை

இந்து மதத்தினர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது என, உத்தரபிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், இந்து மதத்தினர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது என, உத்தரபிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த நிகழ்ச்சியில் பேசிய, கத்தோலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் சைனி, “மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்பட உள்ளதால், அதுவரை இந்துக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது. குழந்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.”, என கூறினார்.

மேலும், “எல்லோருக்கும் சட்டம் என்பது சமமாக இருக்க வேண்டும். இந்த நாடு எல்லோருக்குமானது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆனவுடன், என் மனைவி இனி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கூறினார். ஆனால், நான் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினேன்”, என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது சைனிக்கு புதிதல்ல. இந்துஸ்தான் என இருப்பதால் இந்துக்களுக்கானது என கடந்த ஜனவரி மாதம் சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். அதன்பின், தான் முஸ்லிம்களை குறிப்பிடவில்லை எனவும், பாகிஸ்தானுக்கு எதிராகவே தான் கருத்து தெரிவித்ததாகவும் கூறினார்.

×Close
×Close