மூன்றாம் பாலினத்தவர் விடுதி : மும்பை மாநகரில் இருக்கும் டாட்டா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதிகள் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தவை. மற்ற கல்லூரி விடுதிகள் போல் இதுவும் செயல்பட்டாலும் இதன் தனிச்சிறப்பனாது மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், தன் பாலின அடையாளத்தை கூற விரும்பாத மாணவர்களுக்குமான விடுதி என்பது தான்.
இந்த விடுதியைச் சுற்றிலும் எங்கும் வானவில் வண்ணம் தான். இப்போது இந்திய சாசனச் சட்டம், 377 நீக்கப்பட்ட பின்பு இந்த விடுதியில் மேலும் பல மாணவர்களை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார் அந்த விடுதியில் தங்கியிருக்கும் அகுந்த். அடிக்கடி எங்கள் விடுதிகள் எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் கேட்கிறார்கள். மற்ற விடுதிகள் எப்படி இருக்குமோ அப்படி தான் எங்களின் விடுதியும் செயல்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
மூன்றாம் பாலினத்தவர் விடுதி
கடந்த ஏப்ரல் மாதம் இந்த கல்லூரியில் பாலினத்தை வெளிப்படையாக கூற விருப்பம் தெரிவிக்காத மாணவர்களுக்கு பெண்களின் விடுதிகளில் இடம் ஏற்படுத்திக் கொடுத்தது கல்லூரி நிர்வாகம். தற்போது அந்த கேட்டகிரியில் 17 மாணவர்கள் அங்கே தங்கி படித்து வருகிறார்கள்.
பாலின பேதமற்ற மாணவர்கள் அனைவருக்குமான விடுதி இது. இங்கு யார் வேண்டுமானாலும் வந்து தங்களை ஓய்வுபடுத்திக் கொள்ளலாம் என்று அகுந்த் தெரிவித்தார். எங்களின் அன்றாட வாழ்க்கையில் எங்களின் பாலின தேர்வு அடிப்படையில் பேதங்கள் எதுவும் இங்கு பார்க்கப்படுவதில்லை என்பது உண்மை. கடந்த வருடம் Queer Collective அமைப்பு கல்லூரி நிர்வாகத்திடம் ஹாஸ்டல் குறித்து நிறைய பேசியது. அவர்களுக்கான யூனியன் அமைப்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.
2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் தேசிய பல்கலைக் கழக மானியக் குழு இது தொடர்பான முடிவுகளை மேற்கொண்டது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்வது இது போன்ற விடுதிகளால் சாத்தியம் ஆகும் என்று பேராசிரியர் கேக்தி ரனதே தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க : இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
மூன்றாம் பாலினத்தவர் விடுதி - தேவைகள் என்ன?
2016ம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவர் மீது தொடுக்கப்படும் பாலியல் சீண்டல்கள் மற்றும் தீண்டாமைகளை குற்றமாக ஏற்றுக் கொண்டு அதற்கான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பொது இடங்களில் அவர்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது நீதிமன்றங்கள். “ஜெண்டர் நியூட்ரல் விடுதிகள்” ஆண் மற்றும் பெண் என்ற பாலினங்களுக்குள் தங்களை நிறுத்திக் கொள்ள இயலாத மாணவர்களுக்கு நிச்சயம் தேவைப்படும் ஒன்று என்று கருதிய காரணத்தால் உருவாக்கப்பட்டது என்றும் ரனதே கூறியிருக்கிறார்.
மூன்றாம் பாலினத்தவருக்கு என உருவாக்கப்பட்ட மிஸ்டர், மிஸ், என்பதைப் போல் Mx என்ற கேட்டகிரியை கல்லூரியில் சேரும் போது தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் டாட்டா கல்வி நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் “இது எங்களின் பயத்தினை பெருமளவு குறைத்திருக்கிறது. எங்களை இயல்பாக இங்கு நடமாட விடுகிறது இந்த விடுதியின் அமைப்பு” என்று கூறியிருக்கிறார்கள்.