பாஜக ஆதாயம் : பாஜக கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த வாரம் (16/08/2018) அன்று உடல் நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து அவரைப் பார்ப்பதற்காக நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோர் எய்ம்ஸ் விரைந்தனர். பல முக்கியத் தலைவர்கள் வாஜ்பாய் அவர்களின் வீட்டிற்கு சென்றனர். நிறைய பாஜக தலைவர்களும் வாஜ்பாயினைக் காண அணி திரண்டு வந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
வாஜ்பாய் மரணத்தில் பாஜக ஆதாயம் தேடுகிறதா?
இது தொடர்பாக வாஜ்பாய் அவர்களின் உறவினர் மற்றும் முன்னாள் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான கருணா சுக்லா “இந்த பத்து வருடங்களில் பாஜக எந்த சூழலிலும் வாஜ்பாய் பற்றி யோசித்ததே கிடையாது. ஆனால் திடீரென எங்கிருந்து பாஜகவிற்கு வாஜ்பாய் மீது பாசம் வந்தது என்று தெரியவில்லை.
நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதை ஒட்டி வாக்கு வங்கியினை சேர்ப்பதற்காக வாஜ்பாய் அவர்களின் மரணத்தை வைத்து அரசியலில் ஆதாயம் பார்க்கிறது பாஜக” என்று கூறியுள்ளார்.
கருணா சுக்லா இதற்கு முன்பு பாஜ கட்சியில் 32 வருடங்கள் இயங்கி வந்தவர். பாஜக சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ஜஞ்கிர் தொகுதியில் நின்று வெற்றி பெற்று மக்களவை சென்றவர் கருணா. 2013ம் ஆண்டு பாஜகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகியவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.
வாக்கு வங்கிக்காக இயங்கும் பாஜக
வாஜ்பாய் மீது பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் பாசத்தினைக் கண்டு எனக்கு மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் தான் இருக்கிறது. மக்கள், நரேந்திர மோடியின் 5 கிலோமீட்டர் நடை பயணம் (வாஜ்பாயின் இறுதி அஞ்சலியின் போது) மற்றும் வாஜ்பாய்க்காக நிறுவப்படும் சிலை ஆகிய கண்மூடித் தனமான அறிவிப்புகளை நம்பக்கூடாது. அவர்கள் வாக்கு வங்கி சேர்க்கவே இத்தகைய வேலையை செய்கிறார்கள் தவிர வேறெதற்கும் இல்லை என்றும் பேசியிருக்கிறார் கருணா சுக்லா.