/indian-express-tamil/media/media_files/2025/04/23/uLD2Lfch04xczY05p0gp.jpg)
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 23) அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India acts: Indus Waters Treaty put on hold, Attari checkpost closed, Pak nationals have 48 hours to leave
இந்த அமைச்சர்வை கூட்டம் நிறைவடைந்த பின்னர், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, "நேற்றைய தினம் (ஏப்ரல் 22) 25 இந்தியர்கள் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். படுகாயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறினார்.
"யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு முன்னேற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் அரங்கேறியதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் இந்தியா தரப்பில் இருந்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
1. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அட்டாரி - வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் சென்ற இந்தியர்கள் வரும் மே 1-ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, விசா பெற்றவர்களுக்கு அவை ரத்து செய்யப்படுகிறது. இந்த விசாவின் கீழ் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
4. புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் அடுத்த ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இதேபோல், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய அதிகாரிகள் ஒருவாரத்தில் இந்தியாவிற்கு வரவேண்டும்.
5. மே 1-ஆம் தேதி முதல் உயர் ஸ்தானிகர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 55-ல் இருந்து 30-ஆக குறைக்கப்படும்.
இந்த முடிவுகள் அனைத்தும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இது தவிர முப்படையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.