இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சமீபத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தில்லியிலும் ஏடிஎம் மையங்களில் கடந்த சில நாள்களாக மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லை. இந்த சூழ்நிலையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
ரூ.2000 நோட்டுகள் போதிய அளவில் இல்லாதது, மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிக்கும் வசதிகள் தற்போதுள்ள ஏடிஎம்களில் இல்லாததால் பணத்தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் ஏசிஎம் இயந்திரத்தைத் தேடி அலைந்தனர்.
இந்த நிலையைச் சீர் செய்ய பொதுத் துறை வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சகம் மூத்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், நிதியமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, இதர வங்கிகள், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் நிலைமை சீரடைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களில் 80 சதவீத மையங்கள் புதன்கிழமை முதல் இயங்கத் துவங்கியது. இந்த வார இறுதியில் நிலைமை முழுமையாக சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு புதன்கிழமையும் நீடித்தது. தில்லியிலும் சில ஏடிஎம் மையங்கள் இன்னும்செயல்படவில்லை.