தலைநகர் டில்லியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், ஸ்கிம்மர், கேமரா மற்றும் மெமரி கார்டு உள்ளிட்டவைகள் பொருத்தப்பட்டு தகவல்கள் திருடப்படுவதாக வைரலாகும் வீடியோவால், ஒட்டுமொத்த ஏடிஎம் பயன்பாட்டாளர்களே பெரும்அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
டில்லியில் அர்ஜூன் நகர் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் தான் இந்த அத்துமீறல் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, ரோஸி என்ற டுவிட்டர்வாசி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்த கனரா வங்கி ஏடிஎம்மிலிருந்து ஒருவர் கூடுதலாக இணைக்கப்ட்டுள்ள உபகரணத்தை கழட்டி காட்டுகிறார். அந்த உபரகணம், நமது ஏடிஎம் கார்டை குளோன் செய்வதோடு மட்டுமல்லாது, அதனோடு இணைக்கப்பட்டுள்ள மெமரி கார்டில், அந்த விபரங்களை சேகரிக்கும். இந்த ஏடிஎம்மில் சிசிடிவி கேமரா இருக்கும்போதே, இதுபோன்ற அத்துமீறல் நிகழ்ந்துள்ளது. யார் எந்த ஏடிஎம்மை பயன்படுத்தினாலும், அது பாதுகாப்பானதா என்று ஒன்றுக்கு இரண்டுமுறை சோதனை செய்துபார்ப்பது நலம் என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை உத்தரபிரேதச போலிஸ் கூடுதல் எஸ்.பி. ராகுல் ஸ்ரீவத்சவ் மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் உள்ளிட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கனரா வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அந்த ஏடிஎம்மிலிருந்து சர்ச்சைக்குரிய உபகரணங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை யாருடைய ஏடிஎம் கார்டு விபரங்களும் திருடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கனரா வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கியின் Canara MServe app யை பயன்படுத்தி ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தாத நேரங்களில் அதனுடைய பயன்பாட்டை அணைத்துவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட ரோஸிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்த வீடியோவை மேலும் பலர் ரீடுவிட் செய்துவருகின்றனர்.