உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில், அயோத்தி வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கினர்.
அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக விளங்கிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லாவுக்கு (குழந்தை ராமர்) வழங்க உத்தரவிட்டும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். அதே நேரத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அயோத்தி வழக்கில் தீர்வு காண கடவுளிடம் வேண்டியதாக தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மேலும், 'ஒருவருக்கு நம்பிக்கை இருந்தால், கடவுள் அவருக்கான வழியைக் காட்டுவார்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி வழக்கில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இடம்பெற்றிருந்தார். தற்செயலாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு தலைமை நீதிபதி சென்று பிரார்த்தனை செய்தார்.
இந்த சூழலில், நேற்று ஞாயிற்றுக்கிழமை புனேவின் கெட் தாலுகாவில் உள்ள தனது சொந்த ஊரான கன்ஹேர்சர் கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில், “தீர்ப்பளிக்க, பெரும்பாலும் எங்களிடம் வழக்குகள் உள்ளன. ஆனால் நாங்கள் தீர்வுக்கு வருவதில்லை. அயோத்தி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தில் மூன்று மாதங்களாக எனக்கு அதேபோன்ற நிலை தான் இருந்தது.
அப்போது நான் கடவுள் முன் அமர்ந்து தீர்வு காண வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவரிடம் தவறாமல் வேண்டி வந்தேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், கடவுள் நிச்சயம் வழிகாட்டுவார். என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“