Avaneesh Mishra
ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட கோயில் கட்டுமானக் குழு அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர்கோயில் விவரங்களை உருவாக்கி வருகிறது. கோயிலைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ள லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனம் வடிவமைப்பு மற்றும் பயன்படுத்த வேண்டிய கான்கிரீட்டின் தரம் ஆகியவை குறித்து வல்லுனர்களின் உதவியை அளிப்பதற்காக சென்னை ஐஐடி நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது.
“அயோத்தியை இந்து மதத்தின் மையமாக அங்கீகரிப்பதற்காகவும் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நிலைக்கும் அளவுக்கு வலிமையான ஒரு கோவிலை உருவாக்குவதே தங்களுடைய திட்டம் என்று அறக்கட்டளை உறுப்பினர்கள் கூறியுள்ளனர். எனவே, வல்லுநர்கள் முதலில் அங்கே பூமியில் ஆழமாக பள்ளம் தோண்டி ஒரு தூணைக் கட்டுவார்கள். அதன் உறுதியை முறையாகச் சோதித்த பின்னர், அந்த இடத்தில் கோயிலின் எடையைத் தாங்கும் திறன் இருந்தால், அவர்கள் மீதமுள்ள தூண்களைக் எழுப்பத் தொடங்குவார்கள். இந்த சோதனை செயல்முறைக்கு ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறக்கட்டளை உறுப்பினர்கள் கூறியுள்ளபடி, கோயிலில் மொத்தம் 1,200 தூண்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் 200 அடி ஆழத்தில் அமைக்கப்படும். இதில் உறுதிபடுத்தப்பட்ட மற்ற விஷயங்கள், தூண்களை அமைக்க பள்ளம் தோண்டுவது உள்பட அஸ்திவாரக் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோயிலின் முழு கட்டுமானமும் அடுத்த 39 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 2023 ஜனவரியில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி-யின் பேராசிரியரும் சிவில் இன்ஜினியரிங் துறையின் தலைவருமான டாக்டர் மனு சந்தானம், கட்டிடத்தின் வாழ்நாளை உறுதிப்படுத்த பயன்படும் கான்கிரீட்டின் தரத்தை மதிப்பிடுவதற்காக லார்சன் அண்ட் டூப்ரோவை நிறுவனம் சமீபத்தில் அவர்களை அணுகியதாகக் கூறினார். “நாங்கள் இதுவரை எந்த முறையிலும் வரவில்லை … நாங்கள் ஆலோசனைக்காக அணுகப்பட்டுள்ளோம். நாங்கள் இன்னும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. இந்த விவகாரம் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இப்போதைக்கு, கட்டுமானத்தின் சாத்தியமான அம்சங்களையும், எந்த வகையான குறிப்பிட்ட மாதிரிகள் பயன்படுத்தப்படும் என்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம்” என்று சந்தானம் கூறினார்.
1,000 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய திறன்கொண்ட ஒரு கட்டிடத்திற்கான மனதில் உள்ள யோசனைகளைப் பற்றி பேசிய அவர், பொருட்கள் கவனமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினார். கான்கிரீட்டை பாதிக்கக் கூடிய எந்த வகையான சிதைவுகளானாலும் 1,000 ஆண்டுகளில் அதில் தாக்கத்தையும் ஏற்படுத்தாது கட்டிடத்தின் உறுதித்தன்மையை பாதிக்காது என்பது போன்ற வழிமுறையில் கான்கிரீட் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், அவர், “முடிவாக அங்கே என்ன மண் கிடைக்கிறது என்பதை மாற்ற முடியாது. மண் மற்றும் நிலத்தைன் தன்மையை மனதில் கொண்டு நாம் மேலும் திட்டமிட வேண்டும். சில சமநிலைகள் பராமரிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அநேகமாக வரும் இரண்டு-மூன்று வாரங்களில், நாங்கள் அதற்கான வேலைகளைத் தொடங்குவோம்” என்று கூறினார்.
அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால் கூறுகையில், “கோயில் அழகாகவும் வலிமையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, வல்லுநர்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு செயல்முறையையும் அவர்கள் பரிசீலிப்பார்கள் என்றும், இந்த துறையில் நன்கு அறியப்பட்ட அனைத்து நிபுணர்களும் தொடர்பு கொள்ளப்படுவதாகவும் கூறினார். “நாங்கள் 1,200 தூண்களைக் கட்ட வேண்டும். அதற்காக 1200 துளைகள் தோண்டப்படுகின்றன. அதனால், முதலில் ஒரு தூணிற்கான துளை தோண்டுவோம். பின்னர், அதை கான்கிரீட்டால் நிரப்புவோம். அது திடமான பிறகு, வல்லுநர்கள் அதன் உறுதித் தன்மையை சோதிப்பார்கள் என்பதுதான் திட்டம். தூண் போதுமான உறுதித் தன்மையுடன் இருப்பதில் திருப்தி அடைந்தால், மற்ற தூண்களை கட்டுவோம்” என்று காமேஷ்வர் சௌபால் கூறினார்.
பரிசோதிக்கப்பட வேண்டிய தூணின் துளை ஒரு மீட்டர் விட்டம் மற்றும் 100 அடி ஆழத்திற்கு ரிக் இயந்திரங்களைப் பயன்படுத்தி தோண்டப்படும் என்று அயோத்தி வட்டாரங்கள் தெரிவித்தன. அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் பொறியாளர்கள் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி தூணில் பயன்படுத்தப்படும் கான்கிரீட்டின் தரத்தை சோதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்களின் உதவியைப் பெற ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, 2 லட்சத்து 74 ஆயிரத்து 110 சதுர மீட்டர் அல்லது 67 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமையவுள்ள ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா மந்திர் யோஜனாவின் (ராமர் கோயில்) விரிவான திட்டத்தை அறக்கட்டளை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் (ஏடிஏ) சமர்ப்பித்தது. கோயில் வரைபடத்தின்படி, கோயிலுக்கு 30 மீட்டர் அகல அணுகு சாலை இருக்கும், மொத்த பரப்பளவு 12,879.30 சதுர மீட்டர் இருக்கும். இதில் 2628.50 சதுர மீட்டர் (கோயில்) மற்றும் தரை தளத்தில் 7,343.50 சதுர மீட்டர் நடைபாதை, முதல் தளம் 1850.70 சதுர மீட்டர் பரப்பளவும், இரண்டாவது தளம் 1.56.60 சதுர மீட்டர் பரப்பளவும் அடங்கி இருக்கும்.
ஏ.டி.ஏ உருவாக்கியுள்ள வரைபடத்துடன், நகர் நிகாம், பொதுப்பணித் துறை (பி.டபிள்யூ.டி), மாவட்ட நிர்வாகம் மற்றும் மின் பாதுகாப்பு, தீயணைப்பு துறை பாதுகாப்பு மற்றும் பூகம்ப எதிர்ப்பு தொடர்பான அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ்கள் போன்ற அனைத்து அனுமதிகளும் அறக்கட்டளையால் பெறப்பட்டுள்ளன.