Rakesh Sinha
அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
புதிய ராமர் கோயிலுக்கான பூமி பூஜை இன்று ( ஆகஸ்ட் 5ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், அயோத்தி நகரமே மின்னொளிகளால் ஒளியூட்டப்பட்டு பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. அயோத்தியில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. வீட்டின் மேற்புறத்தில் காவிக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.
பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. பூமி பூஜை நிகழ்வுக்கான ஆயத்தப்பணிகளை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 3ம் தேதி ஆய்வு செய்தார்.
ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதன் முதலாம் ஆண்டு நிறைவுநாள். 370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ராமர் கோயில் இரண்டும், பாரதிய ஜனதா அரசின் முக்கிய நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே இருந்தாலும், கூட்டணி தர்மத்தின் காரணமாக இது செயல்படுத்த முடியவில்லை.
பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அந்த கனவை தற்போது நனவாக்கியுள்ளது. இதன்மூலமாக, 3 தலைமுறைகளுக்கும் மேலாக தடைபட்டு வந்த நிகழ்வு தற்போது நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் குறைந்த அளவிலான விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வுக்கு பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ள நிலையில், புஞ்ஜி டோலா பகுதியில் உள்ள 53 வயதான இக்பால் அன்சாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை, இக்பால் அன்சாரிக்கு, ராமர் கோயில் கட்ட உள்ள ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் அனுப்பியுள்ளது.
இக்பால் அன்சாரியின் தந்தை ஹசீம் அன்சாரியே, ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கை தொடுத்திருந்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது 96வது வயதில், மரணமடைந்திருந்தார். இந்நிலையில், அவரது மகன் இக்பால் அன்சாரிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம், அதன்பேரில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.
காயத்ரி தேவிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரோ வேறுவிதமாக இந்த நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவர். அதுயாதெனில், 1990ம் ஆண்டில் பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்கள் முயன்றபோது, கலவரத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயத்ரி தேவியின் கணவர் ரமேஷ் பாண்டே பலியானார். அவரது உடல், 3 நாட்கள் கழித்து பைலேன் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
எனது கணவரின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விழாவிற்கான அழைப்பு தனக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நான் உறுதியாக கலந்துகொள்வேன். தனது மகன்களுக்கு திருமணம் செய்து விட்டதாக கூறியுள்ள அவர், இந்த கோயில் கட்டுமான பிரிவில் தனது மகன் சுபாஷ் பணியாற்ற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை துவங்க இன்னும் 48 மணிநேரங்கள் கூட இல்லாத நிலையில், இந்த நிகழ்வின் மூலம் இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.