Advertisment

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா: காங்., தலைவர் கார்கே, சோனியா காந்திக்கு அழைப்பு

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
 Ayodhya Trust invites Kharge and Sonia to Ram temple consecration ceremony next month Tamil News

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ayodhya-temple | sonia-gandhi | congress: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. 

Advertisment

இந்நிலையில், ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை, வருகிற ஜனவரி 22-ம் தேதி நண்பகல் மற்றும் மதியம் 12.45 மணிக்கு இடையே நிறுவுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. தனது உடல்நலக்குறைவு காரணமாக தன்னை பார்க்க வருபவர்களை அனுமதிக்காததால் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பிதழ் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவரும், அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினருமான நிருபேந்திர மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ் அகில பாரதீய சம்பர்க் பிரமுக் ராம் லால் மற்றும் வி.எச்.பி சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து விழாவுக்கு அழைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், இருவரும் விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என காங்கிரஸ் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிருபேந்திர மிஸ்ரா, மன்மோகன் சிங்கை சந்திக்க அனுமதி கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவரது பலவீனமான உடல்நிலையைக் காரணம் காட்டி அவரது அலுவலகம் சந்திப்பை நிராகரித்தது.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் இந்த குழுவினர் சந்தித்து, விழாவுக்கு அழைப்பு விடுத்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக, முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு அழைக்கப்பு விடுக்கப்படவில்லை.

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு கோவிலுக்குச் செல்ல ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமிக்கப்பட்ட நாட்கள் ஒதுக்கப்படும் என்றும், சில சிறப்பு ரயில் ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் இருந்து பக்தர்களுடன் சேர்ந்து செல்ல அழைக்கப்படுவார்கள். மேலும் அவர்களின் வரவேற்புக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) தலைவர் டி ராஜா, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் விழா அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Ayodhya Trust invites Kharge, Sonia, to Ram temple consecration ceremony next month

பிரமாண்ட ஏற்பாடு 

பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் மோகன் பகவத் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டு உரையாற்றும் விழாவிற்கு அயோத்தியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கான விருந்தினர் பட்டியல் "கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தார். இதில் தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள், ராணுவ அதிகாரிகள் முதல் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் உள்ளனர். விருந்தினர் பட்டியலில் புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்,  ராமானந்த் சாகரின் ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமனாக நடித்த அருண் கோவில், நடிகை மாதுரி தீட்சித், திரை இயக்குநர் மதுர் பண்டார்கர், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கவுதம் அதானி, டாடா குழுமத்தின் நடராஜன் சந்திரசேகரன், எல்&டி குழுமத்தின் எஸ்.என் சுப்ரமணியன்,  பிரபல ஓவியர் வசுதேவ காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பிற பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். 

தற்காலிக அட்டவணையின்படி, ராமர் சிலை பிரதிஷ்டை என்பது சரயு நதியில் தெய்வத்தை குளிப்பது மற்றும் தேவ தரிசனத்திற்காக அயோத்தியில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களுக்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல நாட்கள் நீடிக்கும் விரிவான சடங்குகளுக்கு முன்னதாக இருக்கும்.

“அனைத்து தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. எங்களுக்கு நேரம் கொடுத்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு தபால் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ராமர் மீது நம்பிக்கை வைத்து, நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தில் பெருமை கொள்பவர்கள் தரிசனத்திற்கு வரவேற்கப்படுவார்கள் என்பதை வி.எச்.பி எப்போதும் நிலைநிறுத்துகிறது. 

அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைத்து முக்கிய தலைவர்களையும் அழைப்பது எப்போதுமே திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என்ற ஊகங்கள் தவறானவை. நிச்சயமாக, நிகழ்விற்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பதில் ஒரு தளவாட சிக்கல் இருப்பதால் அனைவரையும் அழைக்க முடியாது. அதனால்தான் கட்சித் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் விழா முடிந்து அயோத்திக்கு வருவதற்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்”  என்று வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sonia Gandhi Ayodhya Temple Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment