அயோத்தி நிலப் பிரச்னை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு எந்த நீதியும் செய்யவில்லை என்று கூறி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முடிவு லக்னோவில் நடந்த ஏ.ஐ.எம்.பி.எல்.பி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
ஏ.ஐ.எம்.பி.எல்.பி உறுப்பினர் எஸ்.க்யூ.ஆர் இலியாஸ் கூட்டத்துக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போது, “மசூதி தவிர வேறு எந்த நிலத்தையும் எங்களால் ஏற்க முடியாது என்பதால் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால் வழங்கப்பட்ட நிலம் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று கூறினார்.
“மசூதியின் நிலம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது. ஷரியத் சட்டத்தின் கீழ் அதை யாருக்கும் கொடுக்க முடியாது. மசூதிக்கு பதிலாக அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொள்வதற்கு எதிரானது என்றும் வாரியம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மசூதிக்கு மாற்றீடு எதுவும் இருக்க முடியாது என்பது வாரியத்தின் கருத்தாகும்” என்று ஏ.ஐ.எம்.பி.எல்.பி செயலாளர் ஜாபரியப் ஜிலானி கூறினார்.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலமா-இ ஹிந்தும் முடிவு செய்துள்ளதாக ஜாமியத் தலைவர் அர்ஷத் மதானி தெரிவித்தார்.
மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்து ஜாமியத் இந்த முடிவை ஞாயிற்றுக்கிழமை எடுத்தது. தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதன் நன்மை தீமைகள் குறித்து ஆராய ஜமியத் வெள்ளிக்கிழமை ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
மதானி வியாழக்கிழமை தீர்ப்பை குழப்பமானது என்று அழைத்தார். மேலும், மசூதி கட்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட 5 ஏக்கர்களை ஏற்றுக் கொள்ளலாமா என்பது குறித்து முடிவு எடுப்பது உத்தரப்பிரதேச சன்னி வக்ஃப் வாரியத்தின் தனியுரிமை என்று கூறினார். எவ்வாறாயினும், ஜாமியத்தின் முடிவு, அத்தகைய உதவி தேவை இல்லாததால் சலுகையை நிராகரிப்பதாக உள்ளது.
“ஒரு மசூதி கட்டப்பட்டவுடன், அது காலம் உள்ள வரை ஒரு மசூதியாகவே இருக்கும். எனவே பாபர் மசூதி ஒரு மசூதியாக இருக்கும். அது மசூதியாகவே இருந்தது. மசூதியாகவே இருக்கும். இருப்பினும், ஒரு கோவிலை இடித்தபின்னர் பாபர் மசூதி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தால், நாங்கள் எங்கள் கோரிக்கையை இழந்திருப்போம். மேலும், எங்களுக்கு உரிமை கோரவில்லை என்றால், எங்களுக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும்? அதனால்தான் இது உச்சநீதிமன்றத்தின் குழப்பமான தீர்ப்பாகும்”என்றார்.
கடந்த வாரம் ஒருமனதாக வழங்கப்பட்ட தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான வழியை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதுடன், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.