ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்திலான அயோத்தி தீர்ப்பு, சுதந்திர இந்தியாவின் கரும்புள்ளி என தெரிவித்துள்ள ஜாமியாத் உலாமா ஹிந்த் அமைப்பு, சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது.
மவுலானா மகமூத் மதானி தலைமையிலான ஜாமியாத் உலாமா ஹிந்த் அமைப்பின் செயற்குழு கூட்டம், வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சுதந்திர இந்திய வரலாற்றின் கரும்புள்ளி என கருத்து தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, மவுலானா அர்ஷத் மதானி தலைமையிலான ஜாமியாத் இஸ்லாமிய அமைப்பு மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள்ளாக, சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகமூத் மதானி மேலும் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தங்களுக்கு அதிருப்தியளிக்கும் விதமாகவே உள்ளது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனு தாக்கலினால், , எதிர்மறை விளைவுகள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளோம், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இஸ்லாமிய சகோதரர்களும் வழிபாடு நடத்த அனுமதி தரவேண்டும் என்றார்.
ஜாமியாத் உலாமா ஹிந்த் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகளாவன, பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக உள்ளது. அங்கு இந்து கோயில்களை இடித்து மசூதி கட்டப்பட்டதாக எந்த ஒரு ஆவணமும் இல்லை. ஆனால், அங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, மசூதி இருந்ததற்கான ஆவணம் உள்ளது, அதுவும் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தற்போது அளித்திருக்கும் தீர்ப்பு, அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கென்றே சாதகமாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை, சுதந்திர இந்தியாவின் வரலாற்றின் கரும்புள்ளியாகவே நாங்கள் பார்க்கிறோம். இதுபோன்றதொரு தீர்ப்பை, நீதிபதிகளிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதால் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.