இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க வழக்குகளில் ஒன்றான அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதனால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அதனால், பொதுமக்கள் அனைவரும் அமைதிகாத்து நல்லிணக்கத்தை தொடர வேண்டும் என்று தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது யாருக்கும் இழப்போ வெற்றியோ இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில், “நீதித்துறையின் மிக உயர்ந்த மரியாதைக்கு ஏற்ப, சமூகத்தின் பல்வேறு பிரிவுகள், சமூக கலாச்சார அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளும் கடந்த சில நாட்களில் நட்பையும் நேர்மறையான சூழ்நிலையையும் பேணுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் நாம் நட்பைப் பேண வேண்டும்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அது யாருக்கும் இழப்போ வெற்றியோ அல்ல. இந்த தீர்ப்பு இந்தியாவின் சமாதானம், ஒற்றுமை மற்றும் நட்பின் சிறந்த பாரம்பரியத்தை பலப்படுத்துவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள்”என்று அவர் டுவிட் செய்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
அயோத்தி தீர்ப்பு வெளியிடப்படுவதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிலைமையைக் கண்காணிக்க லக்னோவில் உள்ள காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்றாஅர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு மையமான டயல் 100 கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று மாநிலம் முழுவதும் நிலைமையைக் கண்காணித்தார். டிஜிபி ஓம்பிரகாஷ் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
பிரியங்கா காந்தி
உச்ச நீதிமன்றம் அயோத்தி தீர்ப்பு வெளியிடுவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமைதியையும் அகிம்சையையும் கடைபிடிக்க வேண்டியது நமது கடமை என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியாமாக கடைபிடித்துவந்த ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் நாட்டின் பரஸ்பர அன்பு ஆகியவற்றைப் பேணுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இது மகாத்மா காந்தியின் நாடு. அமைதியையும் அகிம்சையையும் பேணுவது நம்முடைய கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். அதேபோல, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) பிரதிநிதிகளும் தீர்ப்பைத் தொடர்ந்து டெல்லி அசோகா சாலையில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.
நிர்மோஹி அகாரா வழக்கறிஞர்கள்
அயோத்தி வழக்கில் ஒரு தரப்பான நிர்மோஹி அகாரா தரப்பு வழக்கறிஞர்கள் நாங்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டியதில்லை என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துளனர்.
நிர்மோஹி அகாரா தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் மோகன் கூறுகையில், “இது ஒரு பழங்கால பிரச்னை. நாங்கள் இங்கே ராமருக்காக இருக்கிறோம். அவர் எங்களை கவனித்துக்கொள்வார். இந்த தீர்ப்பை நாங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டியதில்லை” என்று கூறினார்.
அமித் ஷா உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்துக்கு அழைப்பு
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் டோவல், புலனாய்வு வாரியத்தின் (ஐ.பி) தலைவர் அரவிந்த்குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம்: காங்கிரஸ் கட்சி ஆதீர் ரஞ்சன் சவுத்ரி
ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்
அயோத்தி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்குமாறு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், “உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரகண்ட் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சமூக ஊடகங்கள் அல்லது சமூக நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் பிற தளங்களில் வதந்திகள் அல்லது ஆட்சேபகரமான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படக்கூடாது” என்று கூறினார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அயோத்தி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது குறித்து எந்தவிதமான சர்ச்சையும் இருக்கக்கூடாது. எதிர்மறையான சூழலை உருவாக்க வேண்டாம் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நல்லுறவு பேணப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்
சகோதரத்துவ ஒற்றுமையே நமது மதச்சார்பற்ற நாட்டின் தனிச்சிறப்பு என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில், “அயோத்தி தீர்ப்பிற்கு முன்னால், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் வீடுக்கிறேன். அமைதியுடனும் ஒற்றுமையுடனும் தொடர்ந்து வாழ்வோம். சகோதரத்துவ ஒற்றுமையும் நமது மதச்சார்பற்ற நாட்டின் அடையாளம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி தீர்ப்பைத் தொடர்ந்து பஞ்சாபின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க்கும் வகையில் எதுவும் செய்ய வேண்டாம் என்று அமரீந்தர் சிங் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தி தீர்ப்புக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்வதாகக் கூறினார். “அயோத்தி தீர்ப்பை கருத்தில்கொண்டு டிஜிபி, பிற மூத்த அதிகாரிகளுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை ஆய்வு செய்தோம். நாங்கள் எல்லா அளவிலும் அமைதியைப் பேணுவோம். அமைதியாக இருக்க அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். மாநிலத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எதுவும் செய்ய வேண்டாம்” என்று அவர் டுவிட் செய்துள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சி
அயோத்தி தீர்ப்புக்கு முன்பு கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, “ஜனநாயக அமைப்பில் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பில் நம்பிக்கை வைத்திருப்போம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.
அயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை உச்ச நீதிமன்றம் அளிக்கிறது என்று இந்து மகாசபை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்து மகாசபை வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், அயோத்தியில் ஒரு முக்கிய இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று கூறினார்.
சுதீந்திர குல்கர்னி, சமூக செயல்பாட்டாளர்
ராமர் கோயிலானாலும், புதிய மசூதியானாலும் கோயில், உலகளாவிய அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் புனிதமான அடையாளமாக வரட்டும் என்று சமூக செயல்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.
இந்து மகாசபை வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் இந்த தீர்ப்பின் மூலம், உச்சநீதிமன்றம் பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற செய்தியை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
உமா பாரதி, பாஜக
அயோத்தி தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த உமா பாரதி “மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இந்த தெய்வீக தீர்ப்பை நான் வரவேற்கிறேன். கௌரமான அசோக் சிங்கல் ஜியை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்த பணிக்காக உயிர் கொடுத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.
அத்வானிக்கு வாழ்த்துகள். அவருடைய தலைமையின் கீழ் இந்த மாபெரும் பணிக்காக நாம் அனைவரும் எங்களால் முடிந்தவரை பணயம் வைத்துள்ளோம்” என்று கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அயோத்தி தீர்ப்பை வரவேற்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தசாப்த காலமாக நீடித்த சர்ச்சை இன்று முடிவுக்கு வந்தது” என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்டபின், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு இன்று ஒருமனதாக தங்கள் தீர்ப்பை வழங்கினர். உச்ச நீதிமன்ற முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இன்று உச்ச நீதிமன்றம் தசாப்த கால சர்ச்சைகு முடிவை வழங்கியது. பல ஆண்டுகளாக நீடித்த சர்ச்சை இன்று முடிந்தது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு அனைத்து மக்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் ”என்று குறிப்பிட்டுள்ளார்.
சன்னி வஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி
சன்னி வக்ஃப் வாரியம் அயோத்தி தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால், திருப்தி அடையவில்லை என்றும் தேரிவித்துள்ளனர்.
சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி “நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், நாங்கள் திருப்தி அடையவில்லை. மேலும் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை நாங்கள் முடிவு செய்வோம்” என்று கூறினார்.
நிதின் கட்கரி, மத்திய அமைச்சர்
உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்பால் அன்சாரி, அயோத்தி வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர்
அயோத்தி வழக்கில் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, “உச்சநீதிமன்றம் இறுதியாக ஒரு தீர்ப்பை வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.