”அயோத்தி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அது யாருடைய இழப்போ வெற்றியோ அல்ல. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, நட்பு இன்னும் பலப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள்” என்று தெரிவித்திருந்தார்.
Ayodhya Verdict: Full Text
மோடி அமைதியாக இருக்க அழைப்பு விடுத்தது போல, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் அலர்ட் படுத்தப்பட்டுள்ளன. உத்திரபிரதேசத்தில் நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்படும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. “எந்த சூழ்நிலையிலும் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்க சூழ்நிலையை பேணுவது அனைவரின் பொறுப்பாகும். வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். யாராவது சட்டத்தை மீற முயன்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் அம்மாநில மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆணையாளர்கள், போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் அவர் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். "சட்டம் மற்றும் ஒழுங்கைத் தூண்டும் எந்தவொரு சம்பவத்திற்கும் எதிராக இருப்பது மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்களின் கடமையாகும்" என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவருமே தன்னடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். பாபர் மசூதியை இடித்தபோது கூட, கேரளா ஒரு "முன்மாதிரியாக" நடந்து கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார். மக்கள், தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், “சத்தீஸ்கர் மக்களை அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினையில், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள், சமூக ஊடகங்களில் வரும் வதந்திகள் மற்றும் போலி செய்திகளுக்கு இரையாகாதீர்கள்” என்று தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தீர்ப்பு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. மாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது. ஒட்டுமொத்த தேசமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம்.
மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. நமது ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை உலகம் கண்டுள்ளது. இந்தியாவின் வலிமையான அமைப்பு சுப்ரீம் கோர்ட் என்பது இன்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது போல், இங்கேயும் புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளது, இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது. புதிய இந்தியாவில் எதிர்ம்றை எண்ணங்களுக்கு இடமில்லை. வேற்றுமையும் எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு" என தெரிவித்துள்ளார்.