எம்பிபிஎஸ் படிப்பில் சித்தா, யுனானி, ஆயுர்வேத பாடங்களும் : பாராளுமன்ற குழு, மத்திய அரசுக்கு யோசனை

நடுத்தர வருவாய் பிரிவினரிடையே ஓரளவும்,, குறைந்த வருவாய் பிரிவினரிடையே அதிக அளவிலும் இந்திய பாராம்பரிய முறை வைத்தியங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன

ஆர்.சந்திரன்

ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற இந்திய பாராம்பரிய மருத்துவ முறைகள் குறித்த அறிமுகப் பாடத்தை , எம்பிபிஎஸ் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம், எம்பிபிஎஸ் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு மற்ற வைத்திய முறைகளின் மேல் முழு நம்பிக்கை இல்லாத நிலை இருப்பதை மாற்ற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, தற்போது செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளிலும், மருந்தங்களிலும் கூட, இவ்வகையான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, மற்றும் பரஸ்பர புரிதல் அவசியம் என இந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய அளவில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பொருளாதார வளர்ச்சி கல்வி நிறுவனம் 2017ம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டதாகவும், PLOS One என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியானதாகவும் தெரிகிறது. இதற்காக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றின்படி, நடுத்தர வருவாய் பிரிவினரிடையே ஓரளவும்,, குறைந்த வருவாய் பிரிவினரிடையே அதிக அளவிலும் இந்திய பாராம்பரிய முறை வைத்தியங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன எனத் தெரிய வருகிறது. மேலும் நீண்டகாலமாக குணமாகாத பல வகை நோய்களுக்கும், தோல் நோய்களுக்கும் – நவீன மருத்துவத்தை விட, பாராம்பரிய மருத்துவமுறையே அதிகம் விரும்பப்படுவதாகவும் இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது

ஏற்கனவே, எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான கட்டாய நுழைவுத் தேர்வு முறையை நாடு முழுக்க அமல்படுத்துவதை எதிர்த்து பரவலான விமர்சனம் உள்ள நிலையில், தற்போது அதே மருத்துவத்துறையின் கல்வித்திட்டத்தில் பல மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close