பீகார் பெண் எம்.பி. ரமாதேவி தொடர்பாக, சமாஜ்வாடி கட்சி எம்.பி அசம்கான் கூறிய கருத்தால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
மக்களவையில் நேற்று (ஜூலை 25ம் தேதி) முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா விடுப்பில் சென்றிருந்ததால், பீகார் பா.ஜ. எம்.பி ரமாதேவி, சபாநாயகருடைய இருக்கையில் அமர்ந்து அவைநடவடிக்கைகளை வழிநடத்திக்கொண்டிருந்தார். அப்போது பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. அசம்கான், எம்.பி. ரமாதேவி தொடர்பாக ஆட்சேபகரமான கருத்தை தெரிவித்தார். இதற்கு பல்வேறு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, இந்த விவகாரம் தொடர்பாக, அசம் கானை, அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஸ்மிருதி இரானி கூறியதாவது, இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் அழிக்கமுடியாத கறையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கறையால், ஆண்களுக்கும் அவமானம் தான். இதனை யாரும் கண்டும் காணாமல் இருந்துவிடமுடியாது என்று கூறியுள்ளார்.
மக்களவை மாஜி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது, அ்சம்கான் போன்றோர்களுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். அசம்கானின் இந்த கருத்தால், பாரம்பரிய புகழ் பெற்ற நாடாளுமன்றத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த முடிவை விரைவில் எடுக்க உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.