Advertisment

கிருஷ்ண தேசாய், ராம்தாஸ் நாயக், விட்டல் சவான்... மும்பையை உலுக்கிய அரசியல் கொலைகள்!

பாபா சித்திக்கின் மரணம் மோசமான நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. அவ்வகையில், 1960 -களில் இருந்து, மும்பையில் கிட்டத்தட்ட அரை டஜன் அரசியல் தலைவர்கள் அரசியல் கொலைகளுக்கு பலியாகியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baba Siddique murder Mumbai political bloodshed Tamil News

இடமிருந்து வலமாக: பாபா சித்திக், ராம்தாஸ் நாயக், மௌலானா ஜியாவுதீன் புகாரி, தத்தா சமந்த் மற்றும் விட்டல் சவான்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) மூத்த தலைவரும், மூன்று முறை முன்னாள் பாந்த்ரா மேற்கு எம்.எல்.ஏ.வுமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பையை உலுக்கிய இந்தப் படுகொலை, மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக மும்பையை அச்சுறுத்தி வரும் அண்டர் வேர்ல்ட் கேங்ஸ்டர்களை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் உடனான தொடர்புகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Baba Siddique’s murder: A grim continuation of Mumbai’s political bloodshed

பாபா சித்திக்கின் மரணம் மோசமான நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. அவ்வகையில், 1960 -களில் இருந்து, மும்பையில் கிட்டத்தட்ட அரை டஜன் அரசியல் தலைவர்கள் அரசியல் கொலைகளுக்கு பலியாகியுள்ளனர். இது மும்பையின் ஆர்கனைஸ்டு குற்றங்களுடன் பின்னிப்பிணைந்த அரசியல் போட்டியின் இருண்ட முகத்தை வெளிப்படுத்துகிறது.

சுவாரசியமாக, 1999 முதல் 2014 வரை மூன்று முறை சித்திக் பிரதிநிதித்துவப்படுத்திய பாந்த்ரா மேற்குத் தொகுதி, அதன் நியாயமான அரசியல்வாதிகள் அண்டர் வேர்ல்ட்  வன்முறைக்கு பலியாவதைக் கண்டுள்ளது. 1978-ல் கேர்வாடியில் இருந்து ஜனதா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்தாஸ் நாயக் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். பின்னர் அவர் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து பாந்த்ரா வெஸ்ட் என்ற பெயரான வந்த்ரேயில் இருந்து பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

செல்வாக்கு மிக்க அரசியல்வாதியும், மும்பை பா.ஜ.க தலைவருமான ராம்தாஸ் நாயக், கேங்ஸ்டர் சோட்டா ஷகீலுடன் மோதல் போக்கு கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. இதனையடுத்து, அவரது உயிருக்கு குறி வைத்துள்ளது சோட்டா ஷகீல் கேங். ஆகஸ்ட் 28, 1994 அன்று, பாபா சித்திக்கின் வீட்டிலிருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள தனது இல்லத்திலிருந்து ராம்தாஸ் நாயக் தனது வெள்ளை அம்பாசிடர் காரில், அரசு வழங்கிய பாதுகாப்புப் பணியாளர்களுடன் புறப்பட்டார்.

இதற்கிடையில், 6 பேர் கொண்ட சோட்டா ஷகீல் அவருக்குக்காக காத்திருந்தனர். அவர்களில் பிரபல கேங்ஸ்டர்  ஃபிரோஸ் கோக்னி மற்றும் சோனி என்ற கூட்டாளியும் இருந்தனர், அவர்கள் ஏ.கே-47 துப்பாக்கியால் சுட்டு, நாயக்கையும் அவரது பாதுகாப்பு பணியாளர்களையும் கொன்று விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இந்த வழக்கில் ஃபிரோஸ் கோக்னி உட்பட 12 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் உயர் நீதிமன்றங்களால் பல்வேறு கட்டங்களில் விடுவிக்கப்பட்டனர். 13 ஆண்டுகள் நீடித்த நீண்ட சட்டப் போராட்டத்தில் ஒருவர் மட்டுமே குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

இது மும்பையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியின் முதல் கொலை அல்ல; உண்மையில், இந்த வகையான முதல் சம்பவம் அரசியல் போட்டியிலிருந்து தோன்றியதாக நம்பப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண தேசாய், ஜூன் 5, 1970 அன்று, லால்பாக் என்ற இடத்தில் மழை பெய்யும் இரவில் கொல்லப்பட்டார். அவரது கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டின் பிற்பகுதியில், சிவசேனா கட்சி மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நுழைவதற்கு வழி வகுத்ததாகக் கூறப்படுகிறது. 

கிருஷ்ண தேசாய் ஒரு மில் தொழிலாளி ஆவார், அவர் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் பிரபலமான தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார். அவர் 1952 இல் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் வென்றார். பின்னர் சி.பி.ஐ சார்பில், 1967 இல் பரேலில் இருந்து எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றார், மும்பையின் மில் தொழிலாளர்களின் இதயப்பகுதியான லால்பாக் பரேல் பகுதியில் குறிப்பிடத்தக்க நபராக ஆனார். மும்பையில் ராஷ்டிர சேவா தளத்தை உருவாக்கி வலுப்படுத்துவதில் தேசாய் முக்கிய பங்கு வகித்தார், இது கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சார முன்னணியாக செயல்பட்டது, இளைஞர்களை அதன் பக்கம் ஈர்த்தது.

மும்பையில் சிவசேனா தனது தளத்தை பலப்படுத்த முயன்றபோது, ​​ராஷ்டிர சேவா தளம் மற்றும் தேசாய் ஆகியோரை அச்சுறுத்தலாகக் கருதி, அப்பகுதியில் அரசியல் மேலாதிக்கம் தொடர்பாக சி.பி.ஐ-யுடன் மோதலுக்கு வழிவகுத்தது. ஜூன் 5, 1970 இரவு, யாரோ அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசாய், ஒரு கூட்டாளியுடன் அவரது வீட்டிற்கு வெளியே வந்தார். சிறிது தூரத்தில் அவரை ஒரு கும்பல் பதுங்கியிருந்தது, அவர்களில் இருவர் அவரை வாளால் வெட்டினர்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, தேசாய் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்று அறிக்கையை வெளியிட்டார்; இருப்பினும், கொலைக்காக 19 சேனா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர், இறுதியில் 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

1990-களின் முற்பகுதியில் கொலை செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்தது. கேங்ஸ்டர்களால் குறிவைக்கப்பட்ட கொலைகள் மும்பையை உலுக்கியது. இந்த காலகட்டத்தில் முதல் குறிப்பிடத்தக்க வழக்கு சிவசேனா எம்.எல்.ஏ விட்டல் சவான், 1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குரு சதம் கும்பலைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தான். இந்த கொலை பணப் பிரச்சினை காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. அவரது கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை

ஒரு வருடம் கழித்து, மே 29, 1993 அன்று, சிவசேனா அரசியல்வாதியும் தொழிற்சங்கத் தலைவருமான ரமேஷ் மோரே, அந்தேரியில் உள்ள அவரது இல்லத்தை நோக்கிச் சென்றபோது நான்கு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு அருண் கவ்லி கும்பல்தான் காரணம். ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜூன் 3, 1993 இல், இரண்டு முறை பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த பிரேம் குமார் ஷங்கர்தத் ஷர்மா, கிராண்ட் சாலையில் தனது குடும்பத்தினருடன் உணவருந்தியபோது இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவர்கள் தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் 1994 இல், முஸ்லீம் லீக்கின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நன்கு அறியப்பட்ட சமூகத் தலைவரான ஜியாவுதீன் புகாரி பைகுல்லாவில் கொல்லப்பட்டார். அருண் கவ்லி கும்பல் சிக்கிய நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பலர் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும், 1995ல் மகாராஷ்டிராவில் சிவசேனா-பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடித்த பிறகு, அரசியல் கொலைகள் நிறுத்தப்பட்டன. கடைசியாக படுகொலை செய்யப்பட்ட முக்கிய அரசியல் பிரமுகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான தத்தா சமந்த் ஆவார். ஜனவரி 16, 1997 அன்று, காட்கோபரில் வேலைக்குச் செல்லும் போது, ​​சமந்தின் வாகனம் வழிமறித்து, நான்கு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி, 17 தோட்டாக்களால் அவரை சுட்டுத் தள்ளினர். இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது

பிரீமியம் ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தொழிற்சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியே அவரது கொலைக்குக் காரணம் என்று காவல்துறை கூறியது. மேலும் 2000 ஆம் ஆண்டில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் உட்பட மூன்று பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. கேங்ஸ்டர் சோட்டா ராஜன் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்பட்டார். ஆனால் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 இல் விடுவிக்கப்பட்டார்.

1997 இல் சமந்த் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கொலைகளை மும்பை கண்டதில்லை. எனினும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தொடர்பில் மாநகர போலீசாருக்கு பாபா சித்திக் கொலை புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment