எனது நம்பிக்கையையும், அர்ப்பணிப்பையும் தீர்ப்பு நிலைநாட்டியது: அத்வானி கருத்து

அந்த தீர்ப்பின் காலடிச் சுவடுகள் பின்பற்றி இந்த தீர்ப்பு வந்துள்ளது என்பதையும் நான் பாக்கியமாக உணர்கிறேன்- அத்வானி

By: September 30, 2020, 8:55:08 PM

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் , குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு  28 ஆண்டுகளுக்குப் பிறகு, வழங்கப்பட்ட இத்தீர்ப்பை பாஜகவினர் வரவேற்றுள்ளனர். “ராம் ஜன்மபூமி இயக்கம் மீதான பாஜகவின் உறுதிப்பாட்டை நீதிமன்ற தீர்ப்பு நிலை நாட்டியுள்ளதாக தலைவர்கள் தெரிவித்தனர்.

“பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு ராம் ஜன்மபூமி இயக்கம் மீதான எனது தனிப்பட்ட மற்றும் பாஜகவின் நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது ”என்று முன்னாள் துணை பிரதமரும், 92 வயதான பாஜகவின் மார்க்தர்ஷக் மண்டல் (வழிகாட்டி குழு)  உறுப்பினருமான லால் கிருஷ்ணா அத்வானி தெரிவித்தார்.

” 2019 நவம்பரில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் மற்றொரு முக்கிய தீர்ப்பின் மூலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராம் மந்திரைப் பார்க்க வேண்டும் என்ற எனது நீண்டகால கனவு நிறைவேறியது. அந்த தீர்ப்பின் காலடிச் சுவடுகள் பின்பற்றி இந்த தீர்ப்பு வந்துள்ளது என்பதையும் நான் பாக்கியமாக உணர்கிறேன் ”  என்று அத்வானி தெரிவித்தார்.

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

” தன்னலமற்ற ஈடுபாடு மற்றும் தியாகங்கள் மூலம் அயோத்தி ராம் ஜன்மபூமி இயக்கத்திற்கு பலத்தையும் ஆதரவையும் அளித்த கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், மத குருமார்கள்  என அனைவருக்கும்  நன்றி தெரிவிப்பதாக அத்வானி கூறினார்.

உத்தரபிரதேசத்தில் கரசேவகர்களால் பாபர் மசூதி  இடிக்கப்பட்ட  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பி.ஜே.பி. தலைவர்  எல்.கே.அத்வானி மற்றும்  முரளிமனோகர் ஜோஷி  உமாபாரதி,  வினய் கத்தியார் அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர்  கல்யாண்சிங் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட 32 பேரை விடுதலை செய்வதாக இன்று அறிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குற்றங்களை நிருபீக்க  வலுவான  ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.  தீர்ப்பு நாளான இன்று 26 பேர் மட்டுமே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அத்வானி, எம்.எம்.ஜோஷி, உமா பாரதி, சதீஷ் பிரதான், நிருத்யா கோபால் தாஸ்  கல்யாண் சிங் ஆகிய எஞ்சிய தலைவர்களுக்கு உடல்நலம் மற்றும் வயது காரணமாக  கலந்து கொள்வதில் காரணமாக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

“இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி நடந்த சம்பவத்தில்  எந்தவிதமான சதித்திட்டமும் இல்லை என்பதை  நிரூபிக்கிறது. நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்ரீராம ஜன்மபூமி கட்டுமானத்தைப் நினைத்து அனைவரும் உற்சாகம் கொள்வோம், ” என்று முரளிமனோகர் ஜோஷி  கூறினார்.

 

இது அதிகாரிகளால் புனையப்பட்ட வழக்கு என்பது நிருபணமாகியுள்ளது  என்று பைசாபாத் பாஜக எம்.பியும்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான லல்லு சிங் தெரிவித்தார்.

“சம்பவம் நடைபெற்று 3-4 நாட்களுக்குப் பிறகு அப்போதைய அதிகாரிகளால் நாங்கள்  சிக்கவைக்கப்பட்டோம்.  முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அன்று அயோத்தியில்  நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் கூடியிருந்தனர்.  அவர்களிடம்  கோபமான மனநிலை காணப்பட்டது.  ஒரு கட்டத்தில், பாபர் மசூதியின் குவிமாடங்களை தகர்த்தனர் , ”என்று தீர்ப்பு வெளியாகிய  பின், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொலைபேசியில் பேசிய  லல்லு சிங் தெரிவித்தார்.

“அசோக் சிங்கால் ஜி  உள்ளிட்ட தலைவர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களுக்குள்  ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரிந்தது. உண்மையில், தலைவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால் அதிகாரிகள் தங்கள் அரசியல் சுயலாபங்களுக்காக சதி வழக்கை புனைந்தனர். நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதித்துறையில் இந்திய மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும், மாண்பையும் மீண்டும் பிரதிபலித்துள்ளது,”என்று சிங் மேலும் தெரிவித்தார்.

16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பல பாஜக தலைவர்கள்  நேரடி பங்கு வகிக்கின்றனர் என்று லிபர்ஹான் கமிஷன் அறிக்கை குறித்து கேட்டதற்கு, “அந்த அறிக்கையில் தவறான நோக்கங்கள் இருந்தன. அது அப்போதைய அரசியல் தலைமையால் தூண்டப்பட்ட ஒன்று” என்று தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட  பாஜகவின் பல தலைவர்கள் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தன . ராஜ்நாத சிங் தனது ட்விட்டரில், ” தீர்ப்பு தாமதமாக இருந்தாலும், இறுதியில் நீதி நிலவியது” என்று கூறினார். எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ,உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்யும்  லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை நான் வரவேற்கிறேன் ”என்று சிங் ட்வீட் செய்தார்.

 

 

 

இது ஒரு உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார். பாஜக, விஎச்பி உள்ளிட்ட  அமைப்புகளின் தலைவர்களை அவதூறு செய்யும் நோக்கில் இந்த வழக்கு  காங்கிரஸ் அரசாங்கத்தால்  புனையப்பட்டதாக  குற்றம் சாட்டினார். சர்ச்சைக்கு காரணமானவர்கள்   பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆதித்யநாத் கோரினார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தீர்ப்பு குறித்து கூறுகையில் ,“நானும், எனது கட்சி சிவசேனாவும் தீர்ப்பை வரவேற்கிறோம். விடுதலை செய்யப்பட்ட எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ,உமாபாரதி உள்ளிட்ட தலைவர்களை வாழ்த்துகிறோம். இந்த தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். பழைய அத்தியாயத்தை நாம் மறக்க வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்படாவிட்டால், ராமர் கோயிலுக்கான பூமி பூஜைகளை நாம் பார்திருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், “இந்திய ஜனநாயகத்திற்கு இது மிகவும் சோகமான நாள். எந்த திட்டமிட்ட சதிச் செயலும் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. ஒரு செயல் சதிச்செயல் இல்லை, சட்டென்று நடைபெற்றது என்பதை விளக்க  எத்தனை நாட்கள், விசாரணைகள் தேவை என்பதை தயவுசெய்து எனக்கு அறிவூட்டுங்கள்,” என்று தெரிவித்தார்.

ஓவைசி மேலும் கூறுகையில்,“இது நீதிக்கான பிரச்சினை.  பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான ஒரு பிரச்சினை. ஆனால் பாஜக அவர்களுக்கு அமைச்சர் பதிவி வழங்கி அழகு பார்த்தது.  பாபர் மசூதி பிரச்சினை வைத்து தான் பாஜக அதிகாரத்தில் உள்ளது” என்றும் தெரிவித்தார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Babar masjid verdict advani murli manohar acquitted sad day for democracy says asaduddin owaisi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X