கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி, கோலார் தங்க வயலில் தனது பரப்புரையை தொடங்கினார்.
காங்கிரஸின் ஜெய் பாரத் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “அதானி ஊழலின் அடையாளம்” எனப் பேசினார். தொடர்ந்து, “அவர்கள் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். என்னை தகுதி நீக்கம் செய்து மிரட்டி விடலாம் என நினைத்தார்கள்.
ஆனால் நான் எதற்கும் அஞ்சவில்லை” என்றார். தொடர்ந்து, அதானி ஷெல் நிறுவனங்களில் இருந்த ரூ.20,000 கோடி யாருடையது? பதில் கிடைக்கும் வரை, நான் நிறுத்த மாட்டேன். நீங்கள் என்னை தகுதி நீக்கம் செய்யலாம் அல்லது சிறையில் அடைக்கலாம். இதற்கு நான் பயப்பட மாட்டேன்” என்றார்.
மேலும், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள செயலாளர்களில் ஏழு சதவிகிதம் மட்டுமே ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மக்கள்தொகையில் அவர்களின் பங்கு என்ன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், அது ஓபிசி சமூகங்களை அவமதிக்கும் செயலாகும்” என்றார்.
இதையடுத்து, “பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அவர்களின் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும். (மத்திய அரசு) இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை நீக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய கார்கே, “கர்நாடகத்தில் முதல்வர் வேட்பாளர் என்பது முக்கியம் இல்லை” எனப் பேசினார். கர்நாடத்தில் முதல்வர் வேட்பாளர் ரேஸில் சித்த ராமையா, டி.கே. சிவக்குமார் உள்ளனர்.
இதனால் காங்கிரஸில் உள்கட்சி பிரச்னை நிலவுகிறது. ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு இங்குள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்போதுதான் மோடியின் சாதி தொடர்பாக பேசினார்.
இந்தப் பேச்சு கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, இதற்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மேல்முறையீடு மனுவை தொடர்ந்து ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.