பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் உள்ள கங்காஜல் என்ற பட்டியலின கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் மறைந்த முன்னாள் முதலமைசசர் ராம் சுந்தர் தாஸ். இவர் பட்டியலின (தலித்) மக்களின் தலைவராக திகழ்ந்தவர்.
இந்த கிராமத்தில் உள்ள தினக் கூலியான பூஷண் பஸ்வான் என்பவரை சந்தித்தோம். அவர் கைகளில் புகையிலையை வைத்துக்கொண்டு தேய்த்துக் கொண்டே நம்மிடம் பேசினார்.
அவரின் பேச்சில் இருந்து ராம் விலாஸ் பஸ்வானின் கட்சி இரண்டாக பிரிந்ததில் அவருக்கு உடன்பாடு இல்லையென்பது தெரிந்தது. மேலும் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் எங்கிருந்தாலும், யாரை ஆதரித்தாலும் நாங்களும் அவரை ஆதரிப்போம் என்றார்
பிரதமர் நரேந்திர மோடியை சிராக் பஸ்வான் புகழ்ந்து பேசியதையும், பூஷண் பஸ்வான் மறுக்கவில்லை. இந்த நிலையில் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு பட்டியலின பகுதியான பௌர்பனி கிராமத்துக்கு சென்றோம்.
இங்குள்ள மக்கள் ரவிதாஸ் சமூகத்தைச் சேர்ந்தவர். கங்கை நதிக்கரையில் நிச்சயமற்ற வாழ்க்கையை இவர்கள் வாழ்கிறார்கள். கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால் இவர்களின் குடிசைக்கும் அங்கிருக்கும் உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை.
இது குறித்து பேசிய 27 வயதான ரவிதாஸ் சமூக இளைஞர் சந்தோஷ் குமார், “நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்கிறோம். அனைவரும் ஆதார் கார்டு வைத்துள்ளோம். ஆனால் வீடு இல்லை. இது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாதா? நாங்கள் அவரை நம்புகிறோம். 2019இல் நாங்கள் அவருக்குதான் வாக்களித்தோம். எனினும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் தற்போது என்ன செய்ய முடியும்” என்றார்.
பீகார் மாநிலத்தை பொறுத்தவரை முரண்பட்ட சாதி அரசியலை கொண்டது. இதற்கிடையில் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிப்போம் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் சூளுரைத்துள்ளார்.
அவர் கூறுவதுபோல் அவரிடம் தற்போது மகா கூட்டணி உள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிடம் இழந்த ஆட்சியை ஷிண்டேவை வைத்து தக்க வைத்துக்கொண்ட பாரதிய ஜனதா, பீகாரில் நிதிஷ் குமாரிடம் இழந்துவிட்டது.

இது பாரதிய ஜனதாவினரிடம் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பீகார் மாநிலத்தை பொறுத்தவரை பஸ்வான்களிடம் நெருங்கினால் ரவி தாஸ் சமூகத்தினர் கோபித்துக் கொள்வார்கள்.
யாதவரிடம் நெருங்கினால் யாதவர் அல்லாத சாதிகள் கோபித்துக் கொள்ளும் நிலை உள்ளது. மாநிலத்தில் யாதவர்கள் 14 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் தவிர முஸ்லிம்கள் 17 சதவீதம் பேர் காணப்படுகின்றனர்.
பஸ்வான் மற்றும் ரவிதாஸ் சமூகத்தினர் முறையே 5 மற்றும் 4 சதவீதத்தினர் உள்ளனர். ஆனால் மொத்த எண்ணிக்கையில் 16 விழுக்காடு பட்டியலின மக்கள் உள்ளனர். உயர் சாதி இந்துக்களை பொறுத்தவரை 13 முதல் 14 சதவீதம் வரை இருக்கலாம். மிகவும் பின்தங்கிய சமூகங்கள் 30 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் யாதவர் அல்லா சமூக மக்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
மேலும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் வாக்கு வங்கியாக இவர்கள் உள்ளனர். அந்த வகையில் ஐக்கிய ஜனதா தளத்தில் யாதவர்கள் கை ஓங்கும்பட்சத்தில் இந்த வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.
இதை உணர்ந்துகொண்ட நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்விடம் முன்கூட்டியே நிலையை எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் தற்போதைய நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணிக்கு கிட்டத்தட்ட 60 விழுக்காடு ஆதரவு உள்ளது. இது பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.
மேலும் அவர்கள் மக்களவை தேர்தலை நோக்கி காய்களை நகர்த்த தொடங்கிட்டனர். யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட மற்ற சமூகங்களின் வாக்குக்கும் பாஜக குறிவைத்துள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் பேசுகையில், “2024 தேர்தலை நோக்கி செயல்திட்டம் தீட்டி செயல்படுகிறோம்” என்றார்.
மறுபுறம் நிதிஷ் குமாரின் நிலைமை அறிந்து தேஜஸ்வியும் தனது சமூக தலையீட்டை ஆட்சியில் குறைத்துவருகிறார். இது அடுத்தடுத்த அரசியல் போட்டியாளர்கள் தேர்விலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil