காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக செயல்பாடுகளை கண்டித்தும் வருகின்ற 12ம்தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட சலுவாலியா தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வார காலக்கெடு முடிந்த பின்பும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் பாஜக தவிர அனைத்துக் கட்சியும் போராட்டங்கள் நடத்தி வருகிறது. ஆளுங்கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தனது எதிர்ப்பை காட்டிய நிலையில், எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு, சாலை மறியல் என போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க மாட்டோம். மீறி நடத்தினால் வீரர்களை முற்றுகையிடுவோம் என தமீமுன் அன்சாரி, வேல்முருகன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று ஆளுநரை சந்தித்து, முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் நிலவும் போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட சலுவாலியா தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. இருந்தால் கொடுக்கிறோம் என்று தான் சொல்கிறோம். முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால், கர்நாடகத்திற்கு எதிராக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களே, எங்களை முழு அடைப்பில் ஈடுபட வைக்க காரணமாகிறது. தமிழகத்தில் முழு அடைப்பு செய்யப்பட்டு, கர்நாடகா மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 12ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.