Bangalore Chennai Expressway : இரண்டு பெருநகரங்களை இணைத்தல் என்பது எப்போதுமே மிகப் பெரிய சிக்கல் தான். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஒரு மணி நேரத்திற்கு மட்டும் 9,500 வாகனங்கள் பயணமாகின்றன. இதன் காரணத்தால் ஓசூர் / கிருஷ்ணகிரி சாலை மிகவும் நெரிசலுடனே எப்போதும் இருக்கும். இந்த போக்குவரத்து பிரச்சனையை சரி செய்யவே தற்போது புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு விமான போக்குவரத்து மிகவும் வசதியானதாக இருக்கும். சிலர் ஐ.ஆர்.சி.டி.சியில் புக் செய்து இரவு கிளம்பி , காலையில் பெங்களூர் சென்று விடுகிறார்கள். ஆனால் சாலை போக்குவரத்து என்பது மிகவும் நீண்டதாக (மிக நீண்ட பயணமாகவே) இருக்கிறது.
Bangalore Chennai Expressway - பிப்ரவரியில் டெண்டர் அறிவிக்கப்படும்
சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு புதிய மார்க்கம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது மாநில அரசுகள். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் வெறும் நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றுவிடலாம்.
வெகு நாட்களாக நிலுவையில் இருந்த பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலையை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம். சாலைகள் போடுவதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஒப்பந்ததாரர்களை தேடி வருகிறது நெடுஞ்சாலை ஆணையம்.
அடுத்த வருடம் பிப்ரவரி - மார்ச் மாதத்திற்குள் டெண்டர் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் - அக்டோபரில் சாலை போடும் பணிகள் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். நில கையகப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் இருப்பவர்கள் கூறி உள்ளனர்.
முதற்கட்டப் பணியானது ஹோசாகோட்டேவிற்கும் பெத்தமங்களத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இந்த சாலைகள் போடுவதற்கு மட்டும் சுமார் 17,930 கோடி நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகள் போடும் பணிக்கான திட்டங்களுக்கும், முன் ஏற்பாடுகளுக்கும் இதுவரை சுமார் 1,370 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Bangalore Chennai Expressway - நான்கு மணி நேரம் தான் பயணம்
தென்னிந்தியாவில் கட்டப்படும் முதல் பசுமைவழிச் சாலை இதுவே. ஹோசாகோட்டே, மாலூர், பலமனேர் (ஆந்திர பிரதேசம்), குடியாத்தம், அரக்கோணம், ஸ்ரீ பெரம்பதூர் வழியாக இந்த சாலை அமைய உள்ளது. கர்நாடகாவின் ஹோசேகோட்டேவில் இருந்து ஸ்ரீ பெரம்பத்தூருக்கு இடையேயான தூரம் சுமார் 250 கி.மீ தான்.
இந்த சாலை 6 மணி நேர பயணத்தினை 4 மணி நேரமாக குறைந்துவிடும். கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக இந்த சாலை அமைய இருப்பதால் மிகவும் கவனிப்புடன் இந்த பணிகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து மூன்று முதல் ஆறு மீட்டர் உயரத்திற்கு மேலே கட்டப்படும் இந்த சாலையை அமைக்க, ஒரு கி.மீக்கு சுமார் 15-16 கோடி வரை செலவாகும். இதனால் டோல் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சென்னை டூ பெங்களூர் 2 மணி நேரத்தில் பயணம்! உங்களால் நம்ப முடிகிறதா?