Bangalore Parappana Agrahara Jail: பெங்களூரு பரப்பன அகரஹாரா சிறையில் இன்று காலையில் குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்தச் சோதனையில் ஏராளமான கத்திகள், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிக்கின.
கர்நாடகா மாநிலத்தின் பெரிய சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அமைந்திருக்கிறது. மொத்தம் 40 ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் இந்த சிறைக்குள் 4000 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே இங்கு சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகை அளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிறைக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கஞ்சா, செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் 37 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், ‘பல்வேறு புகார்கள் அடிப்படையில் இந்த சோதனையை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இது தொடர்பாக மேல் விசாரணை நடக்கிறது’ என்றார்.
முக்கியத்துவம் வாய்ந்த சிறையில் இவ்வளவு கத்திகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.