கொரோனா தொற்றுநோய் காரணமாக சூப்பர் மார்க்கெட் மற்றும் பிற பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக இருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது, எல்லாம் மாறிவிட்டன. பெங்களூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவதைத் தடை செய்துள்ளது. திருட்டு அதிகரிப்புதான் அதற்கு காரணம்.
மாஸ்க் அணிந்தவர்கள் திருடுவதால், தாங்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளதாக பிரபல சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
கோவிட் சகாப்தத்துக்கு பிறகு திருடர்கள், செயின் பறிப்பவர்கள் மற்றும் கொள்ளையர்கள் போன்ற குற்றவாளிகளுக்கு மாஸ்க் பொதுவான உடையாக மாறியுள்ளன என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.
கெங்கேரியில் அமைந்துள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட் ஊழியர் ராஜேஷ் ஆராத்யா, கடந்த மாதம், தங்கள் இரண்டு சூப்பர் மார்க்கெட்களில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதால், நிர்வாகம் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறினார்.
நான் பணிபுரியும் கடையில் சுமார் ரூ.1.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்துள்ளோம். நாங்கள் உள்ளே சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளோம், அதை சோதனை செய்தபோது, சந்தேகப்பட்ட திருடர்களின் முகங்கள் முகமூடிகளால் மூடப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். வாரம் ஒருமுறை நடக்கும் சோதனையில் தான் இந்த திருட்டு வெளிச்சத்துக்கு வந்தது, என்றார்.
திருடர்கள் திருடிய பொருட்களை எப்படி மறைத்து வைப்பார்கள் என்று ராஜேஷிடம் கேட்டபோது, திருடப்பட்ட பொருட்களை கல்லூரி பைகளிலோ அல்லது சட்டையிலோ பேன்ட்டுகளிலோ வைத்திருப்பார்கள். பின்னர், அவர்கள் சில பொருட்களை பில் செய்ய கேஷ் கவுண்டருக்கு கொண்டு வருவார்கள், இது குறைந்த விலையில் இருக்கும். பைகளை உள்ளே அனுமதிக்காத கடைகள் உள்ளன. இருப்பினும், சிறிய விற்பனை நிலையங்களுக்கு அந்த சலுகை இல்லை.
அவர்கள் ஏன் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு, இது ஒருவரைப் பற்றியது அல்ல. 1,000 - 2,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடுகிறார்கள், இதை சொன்னால் போலீசார் எங்களை பார்த்து சிரிப்பார்கள். அதே நபர் எப்போவாவது மீண்டும் திரும்பி வருவார், அதைச் செய்பவர்கள் பலர் உள்ளனர், என்றார்.
சூப்பர் மார்கெட்களில் திருட்டு வழக்குகள் பொதுவாகப் பதிவாகாத நிலையில், மாஸ்க் அணிந்து கொள்ளையில் ஈடுபடுவது மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் காவல்துறைக்கு சவாலாக இருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“சமீபத்திய பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில், குற்றவாளிகளை காவல்துறை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க மாஸ்க் பயன்படுத்துவதை நாங்கள் அவதானித்துள்ளோம். செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில், குற்றவாளிகள் ஹெல்மெட் அணிந்ததால், கோவிட்-19க்கு முன்பு இதே போன்ற பிரச்னைகள் எங்களுக்கு இருந்தன. எவ்வாறாயினும், அவர்கள் தப்பிச் செல்லும் வழியில் எங்காவது ஹெல்மெட்டைக் கழற்ற வேண்டியிருந்ததால், சிசிடிவியில் அடுத்தடுத்து பதிவாகும் காட்சிகளால், அவர்களைப் பிடிக்க முடிந்தது. முகமூடிகளைப் பயன்படுத்துவது அவர்கள் அடையாளத்தைத் தவிர்ப்பதை எளிதாக்கியுள்ளது.
இது சிறு திருட்டுகளைப் பற்றியது அல்ல. ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் கூட, முக்கிய சந்தேக நபரும் முகமூடி அணிந்திருந்தார். இது திருடர்களுக்கு ஒரு வகையான சீருடையாக மாறிவிட்டது” என்று அதிகாரி கூறினார்.
Read in English: Covid a distant memory, why supermarkets in Bengaluru are forcing customers to take off their masks
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“