Tirumala tirupati devasthanam battery car facility for devotees: திருமலை திருப்பதியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு, டீசல் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, பேட்டரியின் மூலம் இயங்கும் வாகனங்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
டிரஸ்டு போர்டு தலைவர் சுப்பா ரெட்டி, வைகுண்டம் கம்பார்ட்மெண்ட், நாராயணகிரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு ஏழுமலையானின் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பிரசாதம் தயாரிக்கும் கூடத்திலும் அவர் சோதனை நடத்தினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்பா ரெட்டி கூறியதாவது, கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு உணவு. குடிநீர், மருத்துவ வசதிகள் என அனைவருக்கும் நிறைவான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாட்களில் ஏழுமலையான் தரிசனத்திற்கு 18 முதல் 20 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக பக்தர்கள் கூறினர். தற்போது தான் புதிய போர்டு கட்டமைக்கப்பட்டு, புதிதாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தரிசன காத்திருப்பு நேரம் குறைப்பு குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
திருப்பதியில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வண்ணம், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை தவிர்த்து, விரைவில், பேட்டரியின் மூலம் இயங்கும் வாகனங்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அவர் மேலும் கூறினார்.