யூடியூப்பில் ‘India: The Modi Question' என்ற பிபிசி ஆவணப்படத்தின் முதல் எபிசோடைத் தடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்த சில நாட்களுக்குப் பிறகு, கேரளாவில் உள்ள மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் அந்த ஆவணப்படத்தை மாநிலத்தில் உள்ள வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் திரையிட முடிவு செய்துள்ளன.
செவ்வாயன்று, இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) நரேந்திர மோடி மற்றும் 2002 கலவரங்களுக்கு அவரது குஜராத் அரசாங்கத்தின் பதிலை மையமாகக் கொண்ட ஆவணப்படத்தை வளாகங்களில் திரையிடுவதாகக் கூறியது. இது போன்ற ஒரு திரையிடல் கண்ணூர் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI) – சிபிஐ (எம்)இன் இளைஞர் பிரிவு - அதன் சமூக ஊடக பக்கங்களில், மாநிலத்தில் ஆவணப்படத்தை திரையிடுவதற்கான முடிவை அறிவித்தது. உள்ளூர் DYFI கமிட்டியின் கீழ் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாப்புராவில் ஒரு காட்சி திரையிடப்படும்.
இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஷாபி பரம்பில் இந்த ஆவணப்படத்தை தனது அமைப்பு திரையிடும் என்றார். மோடி மற்றும் சங்பரிவாருக்கு, வரலாற்று உண்மைகள் எப்போதும் எதிரி பக்கம்தான். அதிகாரத்தைப் பயன்படுத்தி இனப்படுகொலையின் நாட்களை மூடி மறைக்க முடியாது, என்றார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள பாஜக மூத்த தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான முரளீதரன், இந்த ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றார். இது தேச விரோத நடவடிக்கை என்றும், இந்த பிரச்னையில் முதல்வர் தலையிட்டு திரையிடலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டு நடவடிக்கைகளை மன்னிப்பதற்கு சமமாக இந்தத் திரையிடல் இருக்கும் என்று முரளீதரன் கூறினார். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை (ஆவணப்படத்தில்) நிராகரித்துவிட்டது. அந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் பொது விவாதத்திற்குக் கொண்டு வருவது உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதற்குச் சமம். இது வெறுப்பை மீண்டும் தூண்டிவிடும், என்றார்.
இந்த திரையிடலுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆவணப்படத்தை திரையிட அனுமதிப்பது நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பலவீனப்படுத்த விரும்பும் வெளிநாட்டு சக்திகளை ஆதரிப்பதாகும். இந்த ஆவணப்படம் கேரளாவில் மீண்டும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டவும், மத நல்லிணக்கத்தை குலைக்கவும் உதவும் என்றார்.
இதற்கிடையில், பாஜகவின் இளைஞர் அணியான யுவ மோர்ச்சாவும் திரையிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யுவ மோர்ச்சா மாநில தலைவர் பிரபுல் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஆவணப்படத்தை திரையிடுவதற்கான எந்த நடவடிக்கையையும் யுவ மோர்ச்சா கடுமையாக எதிர்க்கும் என்று அவர் கூறினார்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பிபிசி தயாரித்த ஆவணப்படத்தை காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கும் "பிரச்சார துண்டு" என்று நிராகரித்துள்ளது. இந்த ஆவணப்படம் இந்தியாவில் கிடைக்கவில்லை, ஆனால் யூடியூப்பில் சில காலம் இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“