கர்நாடக மாநிலத்தின் முதல் அமைச்சராக பி.எஸ். எடியூரப்பா இருந்தபோது பெங்களூரு விமான நிலையத்தில் நடபிரபு கெம்பே கவுடாவுக்கு 108 அடி உயர சிலை வைக்க 2019இல் திட்டமிட்டார்.
இந்தச் சிலை தற்போது திறப்பு விழா காண தயாராக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11ஆம் தேதி சிலையை திறந்து வைக்கிறார்.
ரூ.100 கோடி திட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை ஒக்கலிக்கா சமூக வாக்குகளை கவர வைக்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கர்நாடக அரசியலில் லிங்காயத்துக்கு அடுத்தபடியாக ஒக்கலிக்கா சமூகத்தினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். மாநிலத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனும் ஒக்கலிக்கா சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவர் தவிர வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், இளைஞர் அதிகாரமளிப்பு அமைச்சர் கே.சி.நாராயண கவுடா போன்றவர்களும் ஒக்கலிக்கா சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில், அஸ்வத் நாராயணன் தன்னை ஒக்கலிக்கா சமூக பிரதிநிதியாக காட்ட முயற்சிக்கிறார் என்று பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அஸ்வத், எஸ்.எம். கிருஷ்ணா, ஹெச்.டி. தேவே கவுடா உள்ளிட்டோரை சந்தித்து கூட்டமும் நடத்தியுள்ளார். இதுதான் சலசலப்புக்கு முதன்மை காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மற்ற அமைச்சர்களும் கெம்பே கவுடா சிலை திறப்பு விழாவின்போது தங்களுக்கும் பணிகள் ஒதுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை (அக்.25) கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவிற்கான மாவட்ட அளவிலான ஏற்பாட்டிற்காக அஸ்வத் நாராயண் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வொக்கலிகா அமைச்சர்கள் நாராயண கவுடா மற்றும் சோமசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தற்போது பாஜகவில் ஒக்கலிக்கா சமூகத்தை சேர்ந்த சொல்லிக்கொள்ளும்படியான தலைவர்கள் இல்லை. கர்நாடக மக்கள் தொகையில் ஒக்கலிக்கா சமூகத்தினர் 15 சதவீதம் காணப்படுகின்றனர்.
மறுபுறம் ஹெச். தேவே கவுடா, குமாரசாமி (மதசார்பற்ற ஜனதா தளம்), டி..கே. சிவக்குமார் (காங்கிரஸ்) என வலிமையான மற்ற ஒக்கலிக்கா சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இதை சமன் செய்யத்தான் பாஜகவில் உள்ள ஒக்கலிக்கா சமூக அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் இன்னமும் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.
மேலும் கட்சியில் பி.எஸ். எடியூரப்பா காலம் முதலே டாக்டர் அஸ்வத் நாராயணனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அவரும் வலிமையாகவே காணப்படுகிறார்.
ஒருபுறம் குமாரசாமியை எதிர்கொள்கிறார், மறுபுறம் டி.கே. சிவக்குமாரின் தம்பியான சுரேஷை எதிர்த்து போட்டியிட்டார். மேலும் தற்போது, அஸ்வத் நாராயண் குமாரசாமி மற்றும் டி கே சகோதரர்களின் சொந்த ஊரான தெற்கு கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தின் பொறுப்பாளராக இருக்கும் பாஜக அமைச்சராக உள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரு நகர மண்டலத்தின் அதிகாரப்பூர்வ அமைச்சராக இருக்கும் போது, பெங்களூரு அமைச்சர் அசோக், அவரது நெருங்கிய கூட்டாளியாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டாக்டர் அஷ்வத் நாராயண் பெங்களூரு நகர இலாகாவைக் கையாள ஆர்வமாக இருப்பதாக அறியப்படுகிறது. ஆனால் அவரால் அசோக்-ஐ நெருங்க முடியவில்லை.
கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவிற்கு முன்னதாக, டாக்டர் அஸ்வத் நாராயண், திட்டத்தை நிறைவேற்றியதற்காக பாஜக மத்திய தலைமையின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு "ஒற்றுமை சிலை" மற்றும் ஹைதராபாத்தில் 11 ஆம் நூற்றாண்டின் துறவி ராமானுஜாச்சார்யாவிற்கு "சமத்துவத்தின் சிலை" ஆகியவற்றின் அடிப்படையில் "செழிப்பின் சிலை" என்ற பெயரை பரிந்துரைத்த பெருமைக்குரியவரும் டாக்டர் அஷ்வத் நாராயணன் தான்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் 113 என்ற பெரும்பான்மை இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக ஒக்கலிக்கா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜகவுக்கு பெரும்பான்மையான வாக்குகள் விழவில்லை. கடந்த காலங்களில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் சரிவுக்கு பின்னர் சிறிது வாக்குகள் கிடைத்தன.
ஆனால் 2017இல் காங்கிரஸ் அரசாங்கம் கெம்பேகவுடா பிறந்தநாளை கொண்டாடியது.
அதற்கு பின்னால் டி.கே. சிவக்குமார் நின்றார். இதனால் தற்போது ஒக்கலிக்கா சமூகத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil