Advertisment

குஜராத்தில் ஒரு கிராமத்தில் தலித் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள்

முறுக்கு மீசை வைத்தால், குதிரையில் சவாரி செய்தால், டிஜே இசை நிகழ்ச்சி நடத்தினால் - என்ன செய்தாலும் சாதி மோதலை தூண்டக்கூடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gujarat dalits, Dalit in a Gujarat village, dalit, தலித் சமூகம், குஜராத் கிராமத்தில் தலித் சமூகம், குஜராத் கிராமத்தில் ஒரு இளம் தலித், dalit community, dalit discrimination, Dalit families, Ahmedabad news, Gujarat, Indian Express, Current affairs

குஜராத் கிராமத்தில் இளம் தலித்

முறுக்கு மீசை வைத்தால், குதிரையில் சவாரி செய்தால், டிஜே இசை நிகழ்ச்சி நடத்தினால் - என்ன செய்தாலும் சாதி மோதலை தூண்டக்கூடும். குஜராத்தில் ஒரு கிராமத்தில், கூலிங் கிளாஸ், நல்ல ஆடை அணிந்ததற்காக ஒரு இளைஞர் தாக்கப்பட்டதில், கிராம தலித் மக்கள் ஒரு அமைதியான பின்னடைவையும் மாற்றத்தையும் உணர்கிறார்கள்.

Advertisment

ஜிகர்பாய் ஷெகாலியாவின் வீடு கிராமத்தின் ஆலமரத்தை பார்த்தபடி இருக்கிறது. குஜராத்தின் பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள மோட்டா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே தவழும் ஒரு குறுகிய சந்து, அடர்த்தியான மக்கள்தொகை பெரும்பாலும் ஒற்றை மாடி வீடுகள். மே 30-ம் தேதி 21 வயதான ஜிகர்பாய் கிராமத்தை விட்டு வெளியேறும் போது சன் கிளாஸ் மற்றும் நல்ல ஆடைகளை அணிந்திருந்ததால் அவரது கிராமத்தைச் சேர்ந்த ஏழு ராஜ்புத் ஆண்களால் அங்கே அடித்து தாக்கப்பட்டார்.” என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிகர்பாயின் சகோதரர் பூபத்பாய் மற்றும் தாய் சீதாபென் ஆகியோர் அவரை தாக்கியவர்களிடமிருந்து காப்பாற்ற முயன்றபோது அவர்களும் தாக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவரின் மனைவி, ஜிகர்பாய், பூபத்பாய் மற்றும் இரட்னு பேரால் அவருடைய கண்ணியத்தைச் சீண்டி கோபமூட்டினார்கள் என்று கூறி எதிர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். ஷெகாலியா சகோதரர்கள் மீது எதிர் வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஜிகர்பாய் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு ராஜபுத்திரர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

உனா சாட்டையடி சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு - 2016-ல், இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக நான்கு தலித்துகளை பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சாட்டையால் அடித்துக் கொன்றனர் - மோட்டா கிராமத்தில் நடந்த தாக்குதல் போன்ற தாக்குதல்கள் ஆழமான பாரபட்சங்களை அம்பலப்படுத்த உதவியது. அதே நேரத்தில், மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நுட்பமான எதிர்ப்பையும் சுட்டிக்காட்டுகிறது.

உனா சாட்டையடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரமேஷ் சர்வையா, அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு தாடி வாங்கியது எப்படி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டது - இவை இரண்டும் தனிப்பட்ட விருப்பங்களாகத் தோன்றினாலும், இந்த பகுதிகளில் ஆதிக்க சாதியினருக்கு எதிரான தைரியமான செயல்களாகக் காணப்படுகின்றன.

மோட்டா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் லட்சுமணபாய் ஷெகாலியா (60) கூறுகையில், “எங்கள் தலைமுறை சாந்தமாக இருந்தது. நாங்கள் தாக்கோர் மற்றும் ராஜபுத்திரர்களின் வீடுகளிலும் வயல்களிலும் வேலை செய்தோம். அவர்கள் வீடுகளுக்குள் எங்களை நுழைய விடாமல் தடுப்பதும், தனித்தனி பாத்திரங்களில் தண்ணீர் கொடுப்பதும் வழக்கமாக இருந்தது. நாங்கள் அதை ஒரு பிரச்னையாக மாற்றாமல் அமைதியாக வேலை செய்தோம். இவையெல்லாம் இன்னும் நடக்கின்றன. ஆனால், அது மாறிவிட்டது. நாங்கள் இனி தாகோர்கள் மற்றும் ராஜபுத்திரர்களை நம்பியிருக்கவில்லை. குறிப்பாக இளைய தலைமுறையினர் - அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், அவர்களின் உரிமைகள் பற்றி தெளிவாக இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

லட்சுமணபாய் பேசும் மாற்றம் கல்வி மற்றும் வேலைக்கான சிறந்த அணுகலில் இருந்து உருவானது.

மோட்டா கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன - இவர்களில் 100 குடும்பங்கள் தலித்துகள், மீதமுள்ளவர்கள் ராஜபுத்திரர்கள் மற்றும் ஓ.பி.சி பகுப்பைச் சேர்ந்த தாகோர்கள் - வீடுகள் சாதி அடிப்படையில் தெருக்களாக உள்ளன.

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தலித் குடும்பத்திலும் ஒருவர் அரசாங்க வேலை செய்கிறார் அல்லது ஆயுதப்படையில் சுபேதார் அல்லது ஹவில்தாராக பணிபுரிகிறார்.

ஆனாலும், கொடுமைகள் தொடர்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் உள்ள பல தலித்துகள், முறுக்கு மீசை வைப்பது, சன்கிளாஸ் மற்றும் அழகான ஆடைகளை அணிவது, குதிரை வைத்திருப்பது அல்லது குதிரை சவாரி செய்வது, அவர்களின் திருமணத்தில் தலைப்பாகை (சஃபா) அணிவது, திருமண ஊர்வலத்தின் போது டி.ஜே. இசையை பயன்படுத்துவது போன்ற செயல்கள் வன்முறையில் முடிகின்றன.

லட்சுமணபாய் கூறுகையில், “கடந்த ஆண்டு, தலித் மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்கு குதிரை சவாரி செய்ய விரும்பியபோது, ​​ராஜபுத்திரர் மற்றும் தாகோர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் அதை அனுமதிக்க முடியாது என்று கூறினர். அமைதி காக்க, அவர்களின் கோரிக்கையை ஏற்றோம். பிறகு, திருமண நாளில், மாப்பிள்ளை சஃபா அணியத் துணிந்ததால் ராஜபுத்திரர்கள் கற்களை வீசினர். எங்கள் கிராமத்தில் உள்ள தலித்துகள் கொண்டாட்ட நிகழ்வுகளை அமைதியாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்றும் ஒரு தலித் பாராத் (திருமண ஊர்வலம்) கிராம சதுக்கத்தின் வழியாக செல்ல முடியாது.” என்று கூறினார்.

கிராமத்தை விட்டு வெளியேறி அகமதாபாத்தில் பணிபுரியும் லட்சுமணபாயின் 30 வயது மகன் மகேஷ், தனது தந்தையின் புதிய வீட்டைக் கட்டுவதற்கு உதவுவதற்காக சிறிது காலம் மோட்டாவில் இருக்கிறார். தான் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகக் கூறிய மகேஷ், தான் படிப்பை பாதியில் நிறுத்தியதற்குக் காரணம், அவனது ஆசிரியர்கள் - பெரும்பாலும் ராஜபுத்திரர்கள் மற்றும் தாகோர்கள் - பள்ளி நேரங்களில் அவரை எப்பொழுதும் வேலைக்கு அனுப்புவார்கள். “ஆசிரியர்கள் மற்ற மாணவர்களை வகுப்பில் பணிக்கு அனுப்பவில்லை. என்னை மட்டும் அனுப்பினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு அது தெளிவாகத் தெரிந்தது” என்று அவர் கூறினார்.

மிருதுவான வான-நீல சட்டை மற்றும் ஜீன்ஸ் உடையணிந்து, ஸ்டைலாக டிரிம் செய்து முடி வெட்டப்பட்ட நிலையில், 18 வயதான மயங்க் ஷெகாலியா, தானும் அரசாங்கத்திலோ அல்லது ஆயுதப்படையிலோ வேலைக்குச் செல்ல ஆசைப்படுவதாகக் கூறுகிறார்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தொலைவில், சண்டிசரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் மயங்க், தான் வழக்கமாக சிறிய அவமானங்களை எதிர்கொள்கிறேன். ஆனால், அவற்றைப் புறக்கணிக்கத் முடிவு செய்வதாகக் கூறினார். “நான் கல்லூரிக்குச் செல்லும் போது, ​​கிராமச் சதுக்கத்தில் ராஜபுத்திரர்கள் என்னை எதிர்கொண்டால், அவர்கள் என் உடைகள் அல்லது குடும்பத்தினர் மீது கேவலமான கருத்துக்களைக் கூறுவார்கள். இந்தக் கருத்துக்களை நான் புறக்கணிக்கிறேன். நான் பதிலளித்தால், அது ஒரு வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும் - அது யாரும் விரும்பாத ஒன்று” என்று அவர் கூறுகிறார்.

மோட்டா கிராமத்தில் அரசுப் பள்ளியும், ராஜபுத்திரர்களின் அறக்கட்டளை நடத்தும் பள்ளியும் இருந்தாலும், 15 வயதான க்ரிஷ் ஷெகாலியா, சண்டிசரில் உள்ள பள்ளிக்குச் செல்வதற்காக தினமும் இரண்டு மணிநேரம் பயணம் செய்கிறார். “இங்கே உள்ள அரசுப் பள்ளி பெரிதாக இல்லை, அறக்கட்டளை நடத்தும் பள்ளிகள் எங்களால் செலுத்த முடியாத அளவுக்கு கட்டணம் அதிகம்” என்று கூறிய அந்த வாலிபர் தனக்கு எல்லா சாதியைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பதாகக் கூறினார்.

தலித் சமூகம் எதிர்கொள்ளும் பாகுபாடு மிகவும் நுட்பமானது என்று கூறிய பாரத் ஷெகாலியா (30), “நாம் நம்மையும் நம் குழந்தைகளையும் படிக்க வைக்க முயற்சிப்பது, நல்ல வாழ்க்கையை நடத்த முயற்சிப்பது, நமக்குத் தேவையானதைச் செலவு செய்வது அல்லது சிறிய ஆடம்பரமான தோற்றம் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுவது ராஜபுத்திரர்களை எரிச்சலூட்டுகிறது. எங்கள் எல்லைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை நினைவூட்டும் வாய்ப்பை அவர்கள் வீணாக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது, ​​எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசு வேலைகளை அல்லது பிற வேலைகளை இலக்காகக் கொண்டுள்ளனர். மேலும், எங்கள் வாழ்வாதாரம் அவர்களுடன் பிணைக்கப்படவில்லை. இப்போது நாங்கள் நகரங்களில் வேலை செய்கிறோம், வேறு வேலைகள் உள்ளன.” என்று கூறினார்.

80 வயதான கெமிபென் ஷெகாலியா, இளமையான தலித் பெண்ணாக இருந்தபோது, ​​பொதுக் குழாய்களில் இருந்து தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை தனது சமூகம் எவ்வாறு பெற மறுத்தது என்பதை நினைவு கூர்ந்தார். அப்போது தலித்துகள் பாகுபாடுகளையும் அவமானங்களையும் சுமந்தனர். ஏனெனில் அவர்கள் நிதி ரீதியாக ராஜபுத்திரர்களைச் சார்ந்து இருந்தனர் என்று கூறினார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் குஜராத்தின் பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் / அட்டூழியங்களில் ஆண்டுக்கு ஆண்டு சிறிய சரிவைக் காட்டுகிறது - 2018-ல் 1,426 சம்பவங்களில் இருந்து 2021-ல் 1,201 ஆக - தண்டனை விகிதம் 2018 இல் 3.1% -ல் இருந்து 2021% ஆக உயர்ந்துள்ளது.

2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில், குறைந்தபட்சம் மூன்று தனித்தனி தீர்ப்புகளில், பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிபதி, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தலித் புகார்தாரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மீட்டெடுக்குமாறு மாநில சமூக நலத்துறைக்கு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கும் போது, ​​அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக தலித் வன்கொடுமைகள் குறித்து தவறான புகார்களை பதிவு செய்யும் மிரட்டலை கவனிக்க முடியாது.

இந்த தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு குஜராத் அரசின் சட்டத்துறை எதிர்மறையான கருத்தை தெரிவித்தது.

அகமதாபாத்தைச் சேர்ந்த தலித் உரிமை ஆர்வலர் காந்திலால் பார்மர், வழக்குகளின் எண்ணிக்கை முழுமையான விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்கிறார். “இந்த வழக்குகள் ஒரு சிறு பகுதிதான், பெரும்பாலான வன்கொடுமைகள் பதிவாகவில்லை. பல தலித்துகள் பின்விளைவுகளுக்கு பயந்து காவல் நிலையங்களுக்குச் செல்வதில்லை. சிலர் கிராம மக்களால் தடுக்கப்படுகிறார்கள் அல்லது சமரசம் செய்து பிரச்சினையைத் தீர்க்க அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்” என்று பார்மர் கூறினார்.

சமரசம் செய்துகொண்டவர்களில் அதுல்பாய் ஷெகாலியாவும் ஒருவர். பிப்ரவரி 2022-ல் அவர் சஃபா அணிந்திருந்ததால் அவரது திருமண ஊர்வலத்தின் (பாராத்) மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுல்பாயின் தந்தை விராபாய் பல்வேறு ஐ.பி.சி பிரிவுகள் மற்றும் எஸ்சி / எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். 28 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 23, 2022 அன்று, விராபாய் இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தால் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “வழக்கு மற்றும் அதன் செலவை சமாளிப்பது அவர்களுக்கு கடினமாக இருந்ததால், அவர்கள் விஷயத்தை சமாளித்தனர். அப்போது, ​​பிரச்னையை தீர்த்து வைக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து, அழுத்தம் ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள மற்ற தலித்துகளிடமிருந்து குடும்பத்திற்கு எந்த ஆதரவும் கிடைக்காததால், இந்த விஷயத்தை முடித்துக் கொண்டு செல்வது நல்லது என்று அவர்கள் நினைத்தார்கள். உண்மையைச் சொல்வதென்றால், ராஜபுத்திரர்கள் தீர்வுக்குப் பிறகு எங்களைத் தொந்தரவு செய்யவில்லை.” என்று கூறினார்.

அதுல்பாயின் வீடு, கிராமத்தில் உள்ள சமூகத்தின் பழைய காலனியிலிருந்து விலகி, மோட்டா கிராமத்தில் உள்ள சில புதிய தலித் வீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

31 வயதான பூபத்பாய், கடந்த மாதம் தனது சகோதரர் “கறுப்புக் கண்ணாடி மற்றும் நல்ல ஆடைகளை அணிந்திருந்தார்” என்பதற்காக தாக்கப்பட்டார். கிராமத்தின் பெரியவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரால் வழக்கைத் தீர்க்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். “நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பாகுபாடுகளுக்கும், பெரும்பாலான நேரங்களில் யாரும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சமரசம் செய்து கொண்டாலும், நம் நிலைமை மாறுவது போல் இல்லை. ஒரு கைது கூட நடக்கவில்லை. மாறாக, எதிர் எஃப்.ஐ.ஆரில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்” என்று பூபத்பாய் கூறினார்.

“நாங்கள் அமைதியாகிவிட்டதும் நாங்கள் நெகிழ்வானவர் என்று அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எங்களின் நிலம் ராஜபுத்திரர் மற்றும் தாகோர் ஆகியோரின் மைதானத்தை ஒட்டி உள்ளது. ஆழ்துளை கிணறு அவர்களின் நிலத்தில் உள்ளது. நாங்கள் வழக்கமாக அவர்களின் போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுப்போம். எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஜிகர்பாய் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவர்கள் எங்களுக்கு தண்ணீர் விநியோகத்தை துண்டித்தனர்” என்று பாரத் கூறினார்.

இந்த பாகுபாட்டைச் ஒழிக்க பரிந்துரைக்கப்பட்ட சில வழிமுறைகளை அமல்படுத்த விருப்பமில்லாத நிலை பற்றி சமூக செயற்பாட்டாளர் பார்மர் புலம்புகிறார்.

மேலும் அவர், “தற்போது, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995, துணை பிரிவு 16-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, மாநிலத்தில் ஒரு கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட இல்லை. அதன் உறுப்பினர்களில் முதல்வர் தலைமையிலான குழு, ஆண்டுக்கு இருமுறை கூட வேண்டும். ஆனால், 1995 முதல் இன்று வரை 14 கூட்டங்கள் மட்டுமே கூட்டப்பட்டுள்ளன” என்று கூறினார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் ராஜபுத்திரர்கள்.

இந்த கிராமத்தின் ராஜ்புத்திரர்கள் பகுதியில், 28 வயதான நரேந்திரசிங் பார்மர் மற்றும் 30 வயதான ரஞ்சித்சிங் பார்மர் ஆகியோர் இந்த கிராமத்தில் உள்ள தலித்துகளை இந்த சிறப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

“எங்கள் இளைஞர்களில் பெரும்பாலானோர் ராணுவத்திலும் அரசு வேலைகளிலும் உள்ளனர். உண்மையில், கடந்த ஆண்டு தலித் மணமகன் மீது கல் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட 28 பேரில் பெரும்பாலானோர் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தனர். அவர்களின் எதிர்காலத்தை வேண்டுமென்றே பாழாக்குவதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அவர்கள் கிராம சதுக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையில் அமர்ந்திருந்தபோது கூறினர்.

நரேந்திர சிங் என்ற வழக்கறிஞர் மற்றும் ரஞ்சித்சிங் என்ற விவசாயி, உள்ளூர் சமுதாய கூடம் சில தலித்துகளின் திருமணங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

சாதிப் பாகுபாடு குறித்த குற்றச்சாட்டுகளை இருவரும் நிராகரித்ததோடு, அனைத்து சாதியினரும் ஏற்பாடு செய்யும் சமூக விழாக்களில் கலந்து கொள்வதாகக் கூறினர். “சிலர் மட்டுமே பிரச்சனைகளை உண்டாக்குபவர்கள். மேலும் அவர்கள் தலித்துகள் இது ஒரு சாதிப் பிரச்னை என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று ரஞ்சித்சிங் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dalit Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment