மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாரக்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்தேவ் கோஷ்- சதி தம்பதியினர் ஐபோனை வாங்கி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு 7 வயதில் மகளும் உள்ளார். குழந்தையின் தாய் சதி, குழந்தையை வாங்கியப் பெண் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஜெய்தேவை போலீசார் தேடி வருகின்றனர்.
பாரக்பூர் போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், குழந்தை சனிக்கிழமை முதல் காணவில்லை, ஆனால் அவர்களின் பெற்றோர் புகார் எதும் அளிக்கவில்லை. இது தொடர்பாக சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், தம்பதியிடம் புத்தம் புதிய ஐபோன் இருந்ததும் கண்டு பிடித்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இது குறித்து சதியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தானும், தனது கணவரும் மேற்கு வங்கம் முழுவதும் சுற்றுலாச் சென்று அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட முடிவு செய்ததாகவும், பணத்திற்காக குழந்தையை விற்றதாகவும் கூறியுள்ளார்.
போலீசார், அதே மாவட்டத்தில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த பிரியங்கா கோஷ் என்பவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். மேலும் விசாரணையில் தந்தை ஜெய்தேவ் 7 வயது மகளையும் விற்க முயற்சித்தாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“