பள்ளி ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 27.90 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சுமார் 6 கிலோ தங்கத்தை அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை கைப்பற்றியது.
கொல்கத்தாவில் உள்ள பெல்காரியா டவுன் கிளப்பில் அமைந்துள்ள அர்பிதாவின் குடியிருப்பை ஆய்வு செய்தபோது அலமாரியில் இருந்து பண மூட்டைகள் மீட்கப்பட்டன. வங்கி அதிகாரிகள் மற்றும் எண்ணும் இயந்திரங்களின் உதவியுடன் நோட்டுகளை எண்ணுவதற்கு பல மணி நேரம் ஆனது” என்று அமலாக்க இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வியாழக்கிழமை காலை 5.30 மணி வரை எண்ணும் பணி நடைபெற்றது.
அர்பிதா முகர்ஜி ஏற்கனவே அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் உள்ளார், இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணத்தை எண்ணுவதற்கு குறைந்தது 4 எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
“அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், மூட்டை மூட்டையாக பணம் இருந்ததை கண்டனர். பெரும்பாலான பணம் அவரது வீட்டின் படுக்கையறையில் இருந்து மீட்கப்பட்டது. சில கழிவறையிலும் வைக்கப்பட்டிருந்தன என்று பெல்காரியாவில் உள்ள கிளப் டவுன் ஹைட்ஸ் குடியிருப்பாளர்களில் ஒருவரான அங்கித் சுராரியா கூறினார். அர்பிதா முகர்ஜிக்கு சொசைட்டியில் இரண்டு குடியிருப்புகள் உள்ளன.
பணம் மற்றும் நகைகள் தவிர, அவரது வீட்டில் இருந்து நிலம் தொடர்பான ஆவணங்களையும் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆதாரங்களின்படி, அவரது குடியிருப்பில் இருந்து தங்க கட்டிகள், வெள்ளி நாணயங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் சிடி மீட்கப்பட்டன.

“நான் கடந்த 30 ஆண்டுகளாக வங்கிக் கணக்குகளைத் தணிக்கை செய்து வருகிறேன், என் வாழ்நாளில் இவ்வளவு பணத்தை நான் பார்த்ததில்லை. நாங்கள் வசிக்கும் வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இவ்வளவு பெரிய தொகை அடுக்கி வைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அதே சொசைட்டியில் வசிக்கும் உமேத் நஹாதா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
சங்கத்தின் பராமரிப்புக் கட்டணத்தை அர்பிதா ஜனவரி முதல் செலுத்தாதது குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய தி கிளப் டவுன் ஹைட்ஸ் அபார்ட்மென்ட் அசோசியேஷன் பொருளாளர் சஞ்சய் சந்தக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில்; “எஞ்சியிருக்கும் பராமரிப்புத் தொகை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். நாங்கள் மூன்றாவது காலாண்டில் நுழைந்துவிட்டோம், அவருக்கு இரண்டு பிளாட்கள் இருப்பதால், ஒவ்வொரு காலாண்டிற்கும் கிட்டத்தட்ட ரூ. 20,000 செலுத்த வேண்டும்.
மீட்கப்பட்ட பணத்தைப் பார்ப்பதற்காக சொசைட்டி மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். சொசைட்டியின் கதவுகள் பூட்டப்பட்டு அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சொசைட்டிக்கு வெளியேயும் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
மத்திய புலனாய்வு அமைப்பினர் அந்த வீட்டிற்கு நோட்டீஸ் போட்டு சீல் வைத்துள்ளனர். “… அமலாக்க இயக்குனரகத்தின் அனுமதி பெறாமல், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், வளாகத்தின் உரிமையாளர் உட்பட அனைத்து நபர்களும் முத்திரையை உடைக்கவோ அல்லது வேறு எந்தச் செயலில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எய்ம்ஸ் புவனேஸ்வரில் முழுமையான உடல் பரிசோதனைக்குப் பிறகு பார்த்தா சாட்டர்ஜி மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டார், மேலும் செவ்வாயன்று அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திங்களன்று, சிறப்பு நீதிமன்றம் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி இருவரையும் ஆகஸ்ட் 3 வரை அமலாக்க இயக்குனரக காவலில் வைக்க உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“