பெங்களூருவில் ஜனவரி 1, 2018 புத்தாண்டு அன்று சரியாக 12.05 மணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இலவச கல்வியை நகராட்சி நிர்வாகம் பரிசாக அளித்துள்ளது.
பெங்களூரு ராஜாஜி நகர் அரசு மருத்துவமனையில் அக்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு முன்னதாக மருத்துவமனையில் நள்ளிரவில் நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், சரியாக புத்தாண்டு பிறந்தவுடன் பிறந்த குழந்தைக்கே இலவச கல்வி பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
”புத்தாண்டு பிறந்து சரியாக 5 நிமிடம் கழித்து பிறந்த பெண் குழந்தைக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்குழந்தைக்கு பட்டப்படிப்பு முடியும் வரை இலவச கல்வி அளிக்கப்படும். அதற்காக, முன்னதாக ரூபாய் 5 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்தப்படும். அதன் வட்டியிலிருந்து அக்குழந்தையின் படிப்பு செலவு பார்க்கப்படும்”, என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளை கொண்டாடும் விதமாகவும், பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும் புத்தாண்டு அன்று அந்த மருத்துவமனையில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என பெங்களூரு நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.