பெங்களூருவில் ஜெயின் கோவிலுக்கு அருகே ஹிந்தியில் எழுதி வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில், அதை கிழித்து எறிந்த ஆறு கன்னட ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து #ReleaseKannadaActivists எனும் ஹேஷ்டேக் சமூக தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூரின் கணேஷ் பாக் கோவிலின் வெளிப்புறம், ஜெயின் சமூகத்தினர் வைத்திருந்த அலங்கார வளைவுகளில் ஹிந்தி மொழியில் எழுப்பட்டிருந்தது. அங்கு வந்த கன்னட ஆர்வலர்கள், கன்னடத்தை புறக்கணித்து விட்டு ஹிந்தியில் மட்டும் வைப்பதை அனுமதிக்க முடியாது என்று முழக்கம் எழுப்பி, அதனை அகற்றக் கோரினர். ஆனால், அங்கிருந்த காவலாளிகள் இதற்கு மறுக்கவே, அந்த வளைவில் துணியில் எழுதி வைக்கப்பட்டிருந்ததை கன்னட ஆர்வலர்கள் கிழித்து எறிந்தனர். இதைத் தொடர்ந்து, ஜெயின் சமூகத்தினர் போலீஸிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஆறு பேர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிவு 153A, 427, 504 மற்றும் 506 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் ரமேஷ் கௌடா டி, டாபி அஞ்சனப்பா, ஹரீஷ் குமார் பி, மஞ்சுநாத் எம், சந்திரசேகர் மற்றும் மாதேஷ் கௌடா எஸ் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 நாள் காவலில் எடுக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், #ReleaseKannadaActivists எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சமூக தளங்களில் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்துள்ளது.
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, பேனர்களை கிழித்தவர்களை ரௌடிகள் என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, கன்னடப் போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், 'உங்கள் வீரத்தை மத்திய அரசிடம் காட்டி கர்நாடகாவுக்கு வெள்ள நிவாரண நிதி பெற்றுத் தாருங்கள்' என்றும் அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ""விவசாயிகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பது போல கன்னடாவுக்கும், கன்னடர்களுக்கும் எப்போதும் நான் சம அளவில் முக்கியத்துவம் கொடுப்பேன். மாநில மக்களின் நலனே எனது குறிக்கோள்" என விளக்கம் கொடுத்தார்.
இருப்பினும், இந்த ஹேஷ்டேக்கில் கன்னட ஆர்வலர்களை விடுவிக்கக் கோரியும், ஹிந்திக்கு எதிர்ப்பாகவும் பதிவுகள் அதிகம் இடப்பட்டு வருகிறது.