Advertisment

வேட்டியுடன் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு; பெங்களூரு மாலுக்கு சீல்: தவறை ஒப்புக்கொண்ட நிர்வாகம்

வேட்டியுடன் வந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த பெங்களூரில் உள்ள வணிக வளாகமான ஷாப்பிங் மாலுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு, 'சீல்' வைத்த நிலையில், தங்களது தவறை ஒப்புக்கொண்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Bengaluru mall denies entry to farmer in dhoti admits mistake after outrage shutdown notice Tamil News

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் மாகடி ரோட்டில் ஜி.டி. மால் உள்ளது. இங்கு கடந்த 16 ஆம் தேதி, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்கீரப்பா (62) என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன் (33) கல்கி திரைப்படம் பார்க்க வந்துள்ளார். அப்போது, பக்கீரப்பா வேட்டி அணிந்திருந்ததுடன், தலைப்பாகையும் கட்டியிருந்தார். மாலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஒருவர், 'வேட்டி அணிந்து வந்தால் மாலுக்குள் அனுமதிக்க மாட்டோம்' என்று கூறியுள்ளார். 

Advertisment

இதனால், பக்கீரப்பாவின் மகன் நாகராஜ், காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். தகவல் அறிந்த ஊடகத்தினர் அங்கு சென்றதால், பக்கீரப்பாவை மாலுக்குள் காவலாளி அனுமதித்தார். ஆனாலும், விவசாயியை மால் நிர்வாகம் அவமதித்து விட்டதாகக் கூறி, மாலின் முன் 17 ஆம் தேதி, கன்னட அமைப்பினர் பக்கீரப்பாவுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமாதானம் பேசிய மாலின் பொறுப்பாளர் சிவகுமார், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, பக்கீரப்பாவுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Bengaluru mall denies entry to farmer in dhoti, admits ‘mistake’ after outrage, shutdown notice

இந்நிலையில், இந்த விவகாரம் நேற்று வியாழக்கிழமை நடந்த கர்நாடக சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது. விவசாயியை அவமதித்த மால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இதையடுத்து, நேற்று மதியம் மாலுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே - பி.பி.எம்.பி), அங்கிருந்த மக்களை வெளியேற்றி விட்டு, மாலுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.

இதற்கிடையில், ஜி.டி.மால், இரண்டு ஆண்டாக சொத்து வரி ரூ. 1.78 கோடி பாக்கி வைத்திருப்பது தெரிந்தது. அந்த வரியை செலுத்தும்படியும் நிர்வாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் பேசுகையில், "மால் நிர்வாகம் 2023-24 ஆம் ஆண்டிற்கான சொத்து வரி செலுத்த தவறிவிட்டுள்ளனர். இது பற்றி அவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் பணம் இன்னும் பெறப்படாததால், நாங்கள் மாலை மூட முடிவு செய்தோம்," என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி ஃபக்கீரப்பா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “எனக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாக நின்ற ஊடகங்களுக்கு நன்றி. பொதுமக்கள், அரசு மற்றும் ஊடகங்களிடமிருந்து எனக்கு இதுபோன்ற ஆதரவு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எல்லோரும் எனக்கு ஆதரவாக நின்றதில் மகிழ்ச்சி. ஆடையைப் பார்த்து அனுமதி மறுக்கும் இதுபோன்ற மால்களுக்கு இது ஒரு பாடம்." என்று கூறினார். 

முன்னதாக நடந்த சம்பவத்தை விவரித்த ஃபக்கீரப்பா, கன்னடத் திரையுலகில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் எ.ம்.பி.ஏ பட்டதாரியான தனது மகன் நாகராஜை சந்திக்க பெங்களூரு வந்ததாக கூறினார். செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் மகன் நாகராஜ் திரைப்படத்திற்காக தனது பெற்றோரை மாலுக்கு அழைத்துச் சென்றார். மாலுக்குள் நுழைய முற்பட்டபோது, ​​வேட்டி அணிந்த ஆட்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கூறி, பாதுகாப்புப் பணியாளர்கள் ஃபக்கீரப்பாவை தடுத்து நிறுத்தினர்.

நாகராஜ் மற்றும் ஃபக்கீரப்பா ஆகியோர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பாதுகாப்பு மேற்பார்வையாளர் மனம் தளரவில்லை, நைட்டி அணிந்த பெண்களை கூட உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். எந்த மால் நிறுவனமும் இதுபோன்ற உடையில் மக்களை அனுமதிக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார். 

புதன்கிழமை, ஃபக்கீரப்பா, “நான் ஒரு விவசாயி, என் மகனைப் பார்க்க வெகுதூரம் பயணம் செய்திருக்கிறேன். அவர் எங்களை மாலுக்கு அழைத்துச் சென்றார். வேட்டி அணிந்ததற்காக எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நான் என் மகனை வீட்டிற்குத் திரும்பச் சொன்னேன், ஆனால் அவர் அத்தகைய விதிகளை கேள்விக்குள்ளாக்கினார். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் சந்தித்ததே இல்லை." என்று கூறினார். 

நாகராஜ் கூறும்போது, ​​“பாதுகாவலர்களிடம் காரணத்தைக் கேட்டேன், என் தந்தை வேட்டி அணிந்திருப்பதாகக் கூறப்பட்டது, அதனால்தான் அவர் நிறுத்தப்பட்டார். நான் ஒரு நண்பருடன் பேசினேன், ஆனால் அவர்கள் எங்களை 30 நிமிடங்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் நான் எனது நண்பர்களை அழைத்தேன், மீடியாக்கள் வந்த பிறகு, நாங்கள் புறப்படும்போது எங்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்." என்றார். 

தவறை ஒப்புக்கொண்ட மால் நிர்வாகம் 

தங்களை உள்ளே அனுமதிக்குமாறு மால் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தந்தையும் மகனும் கெஞ்சும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய நிலையில், இது கடுமையான விமர்சனங்களை கொண்டு வந்தது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மால் ஊழியர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், ஆடைக் கட்டுப்பாடு குறித்து எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல் இல்லை என்றாலும், "அழுக்கு உடையில்" மக்களை அனுமதிக்கக் கூடாது என்று வாய்மொழியாக அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.

நேற்று வியாழனன்று, ஜிடி வேர்ல்ட் மாலின் உரிமையாளர் பிரசாந்த் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "எங்கள் முடிவில் இருந்து நடந்த தவறுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்." என்றார். 

வரி பாக்கி தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வந்ததை உறுதிப்படுத்திய அவர், “பி.பி.எம்.பி விளக்கம் கேட்டுள்ளது. சீல் அறிவிப்பு வருவதற்கு முன்பே இன்று (வியாழன்) முதல் மாலை மூடுகிறோம். நாங்கள் ஏற்கனவே மாலில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களிடம் பேசியுள்ளோம். இந்த பிரச்னை தீர்ந்த பிறகு மீண்டும் திறப்போம்,'' என்றார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், பெங்களுருவில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் ஒருவர் "அழுக்கு உடைகள்" அணிந்து வந்தாகக் கூறி ஒருவருக்கு அனுமதி மறுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வீடியோவில், அந்த நபர் வெள்ளை சட்டை அணிந்து தலையில் துணி மூட்டையை சுமந்தபடி காணப்பட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Karnataka Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment