திருமணத்துக்கு வரன் தேடும் மேட்ரிமோனியல் இணையதளங்களில் அறிமுகமான பெண்களை, தான் இன்ஜினியர், டாக்டர் என்று சொல்லி ஏமாற்றி திருமணம் செய்த நபரை மைசூர் நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இந்த நபர் 2014-ல் இருந்து குறைந்தது 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். இவர் அந்த பெண்களுடன் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் பெங்களூரு பானசங்கரியில் வசிக்கும் மகேஷ் கே பி நாயக் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் திருமணம் செய்துகொண்ட மைசூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரைக் கண்டுபிடிக்க போலீசார் விரைவில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தும்கூருவில் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட இந்த நபர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடிக்கடி தன்னை ஒரு டாக்டர், இன்ஜினியர், சிவில் ஒப்பந்தக்காரர் என்று கூறி வந்துள்ளார். அவர் திருமணம் செய்த பெண்களில், நான்கு பேர் அவருடன் குழந்தைகளைப் பெற்றுள்ளனர். மற்றொரு, பெண்ணும் இவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி புகார் அளிக்க முன்வந்துள்ளார்.
காவல்துறையினர் கூறுகையில், நாயக் தும்கூருவில் போலியாக ஒரு கிளினிக்கை தொடங்கி, அவர் ஒரு டாக்டர் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக ஒரு செவிலியரை வேலைக்கு சேர்த்துள்ளார். இருப்பினும், அவருக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லாததால், அவரைத் திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், இது அவருடைய திருமணத்தை நிராகரிக்க வழிவகுத்தது.
இந்த வழக்கில் அளித்துள்ள பாதிக்கப்பட்ட பெண், நாயக் கிளினிக் அமைப்பதற்கு பணத்திற்காக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். அவர் மறுத்ததால், அவர் தனது நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இதில், சுவாரஸ்யமாக, நாயக்கின் பெரும்பாலான மனைவிகள் நிதி ரீதியாக சுதந்திரமான தொழில் வல்லுநர்கள், அவர்கள் அவமானம் மற்றும் சமூக இழிவுகளுக்கு பயந்து புகார்களை பதிவு செய்வதைத் தவிர்த்தனர்.
நாயக்கின் தந்தையும் அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"