கர்நாடக மாநிலம் பெங்களூரு சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரதிமா. 45 வயதான இவர், கர்நாடக மாநில ஆட்சிப் பணி அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இவர் கனிம வளம் மற்றும் நில அறிவியல் துறையின் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை (நவ.4) மாலை பணி முடிந்ததும் அலுவலக காரில் திரும்பிய அவர் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொல்லப்பட்ட பெண் அதிகாரியின் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளன.
எனினும், வீட்டில் எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படவும் இல்லை. மேலும், கொலையாளிகள் பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்த அடையாளங்களும் இல்லை.
இதனால் கொலையுண்ட பெண் அதிகாரிக்கு தெரிந்தவர்கள் தான் கொலையாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகமும் காணப்பட்டது.
இந்த நிலையில் அவரின் முன்னாள் கார் டிரைவர் கிரண் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிரண் சமீபத்தில் டிபார்ட்மென்ட் மூலம் வேலையில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வேறொரு டிரைவர் நியமிக்கப்பட்டார். சம்பவத்திற்குப் பிறகு, கிரணின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
தற்போது கிரணிடம் விசாரணை நடந்துவருகிறது என்றார். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் சித்த ராமையா உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பிரதிமாவின் கணவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும் சொந்த ஊரான சிவமோகாவில் வசித்து வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Bengaluru murder: Police arrest senior geologist’s former car driver
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“