கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதியிலிருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை நெலமங்களா பகுதியில் இருந்து பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர்.
படுகொலை
அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்த போது மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் 30 பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bengaluru woman’s body chopped into pieces: Prime suspect found dead in Odisha, police say ‘suicide note has confession’
பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமியை கொலை செய்து, உடல் பாகங்களை 30 துண்டுகளாக வெட்டிய தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவருடன் வேலைப் பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மகாலட்சுமியை தினமும் அழைத்து சென்று வந்தது தெரியவந்தது.
விசாரணை
அந்த இளைஞரை பற்றி தனிப்படை காவல்துறையினர் விசாரணை தொடங்கினர். அப்போது அவரது செல்போன் நம்பர் வீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. மேலும் போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போனை கைப்பற்றினர். அடிக்கடி மகாலட்சுமியின் செல்போன் எண்ணில் இருந்து தலைமறைவான மேற்கு வங்க இளைஞர் செல்போனுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது.
அந்த இளைஞரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பெண் கொலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த முக்திராஜன் பிரதாப் ரே மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மகாலட்சுமியின் கணவர் தெரிவித்தார். அந்த இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து, காவல்துறை இக்கொலை தொடர்பாக தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கி விசாரணையை முடுக்கி விட்டனர்.
திருப்பம்
இந்த நிலையில், பெங்களூரு இளம் பெண் மகாலட்சுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்து வரும் முக்திராஜன் பிரதாப் ரே ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள புயின்பூர் கிராமத்திற்கு அருகில் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக அம்மாநில காவல்துறையினர் பெங்களூரு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர் அவரது மரணம் தற்கொலையாக அல்லது இருவவரின் கொலையில் வேறு ஒருவருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய பெங்களூரு டி.சி.பி சேகர் ஹெச் தெக்கண்ணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், முக்திராஜன் பிரதாப் ரே தற்கொலை செய்துகொண்டதை உறுதிப்படுத்தினார். ஒடிசாவின் துசூரியில் உள்ள காவல்நிலையத்தின் பொறுப்பாளர் சாந்துனு குமார் ஜெனா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், அவர் தற்கொலை பற்றிய புகாரைப் பெற்றதாகக் கூறினார், மேலும் பாதிக்கப்பட்டவர் முக்திராஜன் பிரதாப் ரே என்று அடையாளம் காட்டினார்.
“காலை 8:15 மணியளவில் எங்களுக்கு அறிக்கை கிடைத்தது. அவரது உடல் புயின்பூர் (அவர் வாழ்ந்த இடம்) அருகே கண்டெடுக்கப்பட்டது. நாங்கள் அதை காலை 9 மணியளவில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினோம், பின்னர் அதை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம், ”என்று சாந்துனு குமார் ஜெனா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
தற்கொலைக் குறிப்பை பெங்களூரு காவல்துறையிடம் ஒடிசா போலீசார் ஒப்படைத்துள்ளார்களா? என்ற கேள்விக்கு, அது இப்போது நீதிமன்ற ஆவணம் என்று அவர் கூறினார். "பெங்களூரு காவல்துறை முதலில் கோரிக்கையை சமர்ப்பித்து நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும், அதைத் தொடர்ந்து நாங்கள் தற்கொலைக் குறிப்பைக் கொடுப்போம்" என்றும் சாந்துனு குமார் ஜெனா கூறினார்.
முக்திராஜன் பிரதாப் ரே தனது மடிக்கணினி பையுடன் அதிகாலை 4 மணியளவில் தனது கிராமத்திற்குச் சென்றதாகவும், சிறிது நேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். விசாரணையின் ஒரு பகுதியாக ஒடிசாவில் இருந்த பெங்களூரு நகரக் காவல் துறையினர், அந்த கிராமத்திற்குச் செல்வதாக நம்பப்படுகிறது.
மகாலட்சுமியும் முக்திராஜன் பிரதாப் ரேயும், ஒரே மாலில் பணிபுரிந்ததாகவும், 2023-ம் ஆண்டு முதல் நண்பர்களாக இருந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். மல்லேஸ்வரத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் குழுத் தலைவராகப் பணியாற்றிய மகாலட்சுமி, கணவரிடமிருந்து பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“