பாரத் பந்த் : பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நாளை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழகத்தில் திமுக மற்றும் மதிமுக கட்சிகள் தங்களின் முழு ஒத்துழைப்பினை தர இருப்பதாக அறிவித்திருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை : பாரத் பந்த்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முற்படாத சமயத்தில் மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முற்படவில்லை. அதனைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் 80 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது.
பாரத் பந்த் : அழைப்பு விடுத்த காங்கிரஸ் கட்சி
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நாளை (10/09/2018) முழு கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி என்.ஜி.ஓக்கள் மற்றும் தனியார் அமைப்புகளையும் இந்த பந்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறது. நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை இந்த கடையடைப்பு நடைபெற உள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கட்சிகளின் ஆதரவு
தமிழகத்தில் திமுக மற்றும் மதிமுக கட்சியினர் இந்த கடையடைப்பிற்கு முழு ஆதரவை அளிக்க இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு ஆதரவு தரவில்லை. ஆனால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.
அதே போல் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இந்த போராட்டத்தை பெங்களூரில் நடத்த இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஜார்கண்ட் விகாஷ் மோர்ச்சா மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் தங்களின் முழு ஆதரவினை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க இருக்கிறது. இதே நேரத்தில் பொதுவுடமைக் கட்சிகள் தனியாக பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மகாராஷ்ட்ரா, பிஹார், கர்நாடகா, ஒடிசா, தமிழ் நாடு, மேற்கு வங்கம் என பல்வேறு இடங்களில் இந்த பந்த் நடைபெற இருக்கிறது.