செப்டம்பர் 27 அன்று பாரத் பந்த்: மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததன் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை திங்கள்கிழமை, சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் (எஸ்.கே.எம்) பாரத் பந்த் அழைப்பு, அரசியல் கட்சிகள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும் ஆதரவைப் பெற்றுள்ளது.
பல எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பந்த்க்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தமிழக அரசுகள், நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவை அறிவித்துள்ளன. அதே நேரம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறியுள்ளது.
பாரத் பந்த் நடைபெற உள்ள நேரம்
நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் மூடப்படும். இருப்பினும், மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரநிலைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். தன்னார்வ மற்றும் அமைதியான முறையில் பந்த் அமல்படுத்தப்படும் என்று எஸ்.கே.எம் உறுதியளித்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆந்திர அரசு ஆதரவு
ஆந்திர அரசு செப்டம்பர் 27 அன்று பாரத் பந்த் மற்றும் விசாகப்பட்டினம் இரும்பு ஆலை தொழிலாளர்களுக்கு முழு ஆதரவை அறிவித்துள்ளது என்று மாநில தகவல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பெர்னி வெங்கடராமையா (நானி) சனிக்கிழமை தெரிவித்தார்.
நானி செய்தியாளர்களிடம் கூறுகையில், செப்டம்பர் 26 நள்ளிரவு முதல் செப்டம்பர் 27 மதியம் வரை மாநிலம் முழுவதும் APSRTC பேருந்துகளை நிறுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பாரத் பந்த் அழைப்புக்கு திமுக ஆதரவு
தமிழகத்தில் ஆளும் திமுக, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் செப்டம்பர் 27 அன்று உழவர் தொழிற்சங்கங்களால் அழைக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், “பாரத் பந்த்” தமிழ்நாட்டில் வெற்றிபெற செய்யுமாறு அதன் நிர்வாகிகளையும் வலியுறுத்தியுள்ளது.
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் பிற இடங்களில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் திமுக நிற்கிறது என திமுகவின் மாநில விவசாய பிரிவு தலைவர் என்.கே.கே.பெரியசாமி கூறினார். மேலும் மத்திய அரசு எதேச்சதிகாரமாக செயல்படுகிறது, விவசாயிகளை ஒருபோதும் கவனிக்கவில்லை. தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொது மக்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து சமூக அமைப்புகளும் இந்த பந்த்-ல் பங்கேற்று முழுமையான வெற்றியை பெற வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கேரளா: ஆளும் எல்டிஎஃப் செப்டம்பர் 27 பந்த் அழைப்புக்கு ஆதரவு
கேரளாவின் ஆளும் எல்டிஎஃப் விவசாயிகளுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த செப்டம்பர் 27 அன்று மாநிலம் தழுவிய பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் ஆளும் கட்சி கூட்டணியின் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு இந்த அழைப்பை எல்டிஎஃப் கன்வீனர் மற்றும் சிபிஐ (எம்) செயல் செயலாளர் ஏ.விஜயராகவன் அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஜயராகவன், போராட்டத்தில் ஐந்து லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றார். மேலும், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட அமைப்புகள் எல்டிஎஃப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
செப்டம்பர் 27 அன்று பாரத் பந்த்: விவசாயிகளின் போராட்டத்தில் காங்கிரஸ் இணைகிறது
பாராளுமன்றத்தில் மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்த செப்டம்பர் 27 “பாரத் பந்த்” இல் காங்கிரஸ் சேரும் என்று கட்சி சனிக்கிழமை அறிவித்தது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப், கடந்த ஏழு ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு விவசாயத் துறையைத் திட்டமிட்டுத் தாக்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மோடி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மூலோபாய துறைகள் என்ற பெயரில் விவசாய நிலங்களை அபகரிக்க கொண்டுவந்தது, ஆனால் அரசாங்கம் இந்த மசோதாவை கைவிட வேண்டும், என்றார்.
மேலும் “விவசாயத் துறையின் அனைத்துச் சீரழிவுகளுக்கும் மோடி அரசுதான் பொறுப்பு. இப்போது டெல்லி எல்லையில் விவசாயச் சட்டங்களை எதிர்த்து 9 மாதங்களாக போராட்டம் நடத்திய விவசாயிகளை நோக்கி அவர்கள் கண்மூடித்தனமாக உள்ளனர். இந்த போராட்டத்தில் 600 விவசாயிகள் இறந்துவிட்டனர், ஆனால் அரசாங்கம் இன்னும் விவசாய சட்டங்களைப் பற்றி பேசக்கூடாது என்று வலியுறுத்துகிறது, ” என்று வல்லப் கூறினார்.
தேஜஸ்வி யாதவ் ஆதரவு
பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடியின் தலைவருமான தேஜஸ்வி யாதவும், பாரத் பந்த் என்ற விவசாயிகளின் அழைப்புக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
ஒரு ட்வீட்டில், தேஜஸ்வி யாதவ் இல்லத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டணி கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில், என்டிஏ அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 27 அன்று அழைக்கப்பட்ட பாரத் பந்தில் பங்கேற்க மற்றும் ஆதரவளிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.” மேலும் “நாங்கள் விவசாயிகளுடன் உறுதியாக இருக்கிறோம்,” என்றும் தேஜஸ்வி கூறினார்.
பாரத் பந்த்: வங்கி அதிகாரிகள் சங்கம் ஆதரவு
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் திங்கள்கிழமை பந்த் நடத்த ஆதரவு அளித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், மோதலின் மையத்தில் உள்ள மூன்று சட்டங்களை ரத்து செய்யவும் அரசுக்கு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் போராட்ட நடவடிக்கைகளுக்கு அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மாநில அலகுகள் ஒற்றுமையுடன் இணையும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil