மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143ஆவது பிறந்தநாளை டிச.11 முன்னிட்டு பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
திருவள்ளுவர் மற்றும் சுப்பிரமணிய பாரதியின் பெருமைகளை பேசிவரும் பிரதமர் மோடி, பாரதியாரின் 143-வது பிறந்தநாளான இன்று, காலவரிசையில் தொகுக்கப்பட்ட மகாகவியின் படைப்புகளை தொகுப்பு நூல்களாக பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இந்த தொகுப்பில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்ற விவரங்கள் உள்ளன. முதன்முறையாக பாரதியாரின் இந்த தொகுதிகள் நூல்களாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறுவனம் இதை வெளியிடுகிறது. இந்த நிறுவனம் பாரதியாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி, மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் பிரதமரின் அரசு இல்லத்தில் இன்று மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழில் வெளியிடப்படும் இந்நூலை சீனி விஸ்வநாதன் என்பவர் தொகுத்துள்ளார். இவர், பாரதியாரின் சகோதரரான விஸ்வநாதனுக்கு வழிகாட்டியாக இருந்தவர். இவ்விழாவில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமச்சர் டாக்டர்.எல்.முருகன் மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
உத்தரப் பிரதேசம் வாராணசியின் கடந்த 2022-ல் நடந்த காசி தமிழ் சங்கமத்தில் முதன்முறையாக பாரதியின் பிறந்தநாளை மத்திய கல்வித் துறை அமைச்சகம் இனி வருடந்தோறும் ‘தேசிய மொழிகள் தினம்’ மாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இதன் காரணமாக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இவ்வாண்டு பாரதியாரின் பிறந்தநாள் முதன் முறையாக கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் வாராணசியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டு அது பொதுமக்கள் வந்துப்போகும் இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“