மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் இன்று நடைபெற்ற சர்வதேச பாரதியார் விழாவில் காணொளி வழியாக பேசிய பிரதமர் மோடி, பாரதியாரின் பல கவிதைகளை மேற்கோள் காட்டி அவருக்கு புகழாரம் சூட்டினார்.
மகாகவி பாரதியாரின் 139 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பாரதியாரின் பிறந்தநாளில் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியார் சர்வதேச விழாவில் பிரதமர் மோடி தலைமை வகித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் காணொளி வழியாக பேசிய பிரதமர் மோடி, “மகாகவி பாரதியார் ஜெயந்தி நாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்தி சர்வதேச பாரதியார் விழாவில் கலந்துகொண்டதற்கு பெருமைப்படுகிறேன். பாரதியார் பற்றி ஆய்வு செய்யும் மிகப்பெரிய ஆய்வாளர் சீனி விஸ்வநாதனை பாராட்டுகிறேன். பாரதியார் யார் என்று கேட்டால் அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. அவர் ஒரு தனிப்பட்ட பணியில் மட்டும் ஈடுபடவில்லை. பன்முகத் திறமைகளை கொண்டவர்.
பாரதியாரை எப்படி விவரிப்பது என்பது மிகவும் கடினமான கடினமான ஒரு கேள்வி. அவர் பல தளங்களில் வேளை செய்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், பெண்ணியவாதி என பன்முகங்களைக் கொண்டவர்.
அவருடைய கவிதை, தத்துவம், அவருடைய வாழ்க்கை அதிசயிக்கத்தக்கவை. அவர் வாரணாசியுடம் மிகவும் நெருக்கமாக தொடர்புகொண்டிருந்தார். அவருடைய படைப்புகள் 16 தொகுதிகளாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. 39 ஆண்டுகள் குறுகிய காலமே வாழ்ந்த அவர் பல சாதனைகளை செய்துள்ளார். அவரது எழுத்துகள் நம் எதிர்காலத்துக்கும் வழிகாட்டுகின்றன.
இன்றைய இளைய தலைமுறையினர் அவரை பின்பற்ற வேண்டும். இளைஞர்கள் முக்கியமாக அவரிடம் இருந்து துணிச்சலை கற்றுக்கொள்ள வேண்டும்.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே;
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என்று பாடுகிறார் பாரதி. இளைஞர்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். பண்டைய இந்தியாவுக்கும் நவீன இந்தியாவுக்கும் இணைப்பாக செயல்பட்டார் பாரதி. பழமையையும் புதுமையையும் இணைக்க நினைத்தார்.
பாரதியார் தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என நினைத்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் முன்னேற்றத்தின் அவசியம் குறித்து தனது பாடல்கள் மூலமாக எடுத்துரைத்தார். பெண்கள் வலிமை பெற வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர வேண்டும் என எண்ணினார். பாரதியார் சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டார்.
“இனியொரு விதி செய்வோம்;
அதை எந்த நாளும் காப்போம்”
“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடியவர் பாரதி. அவருடைய பாடல்களை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி, பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”