இது தானா உங்க டக்கு? உ.பி போலீசும் வாண்டட் போஸ்டரும்

ஊ.பியில் கைது செய்யப்பட வேண்டிய நபரின் போஸ்டரை கையில் வைத்துக்கொண்டே அவரிடம் பேசிய போலீஸ். அடையாளம் தெரியவில்லை என விளக்கம்.

உத்தர பிரதேசத்தில் தலித் மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு “பீம் ஆர்மி”. இதன் தலைவர் வினய் ரத்தன் கடந்த சில தினங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு 2017ல் தலித் மக்களின் ஒடுக்கமுறையை எதிர்த்து நிகழ்ந்த கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக வினய் தேடப்பட்டு வருகிறார்.

இவ்வாறு இருக்க அவரைப் பிடித்து தருவோருக்கு உ.பி அரசிடம் இருந்து ரூ. 12 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வாண்டட் போஸ்டர்களையும் போலீஸ் ஒட்டி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக, போஸ்டர்களை ஃபதேபூர் கிராமத்தில் உள்ள பகுதிகளில் போலீசார் பகிர்ந்து வந்தனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு நிற்க, அந்த வீட்டின் வெளியே தாய் மற்றும் மகன் வெளியே வருகிறார். தனது மகனை அந்தத் தாய் சச்சின் என்று கூறுகிறார். பின்னர் போலீசாரும் அந்தத் தாய் மற்றும் மகனிடம் அரை மணி நேரம் பேசி சென்றனர். இதனை அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்தனர்.

கைது செய்ய வேண்டிய நபர் கண் முன்னே இருந்தும், அடையாளம் காணாமல், அவரிடமே அரை மணி நேரம் பேசி சென்ற உ.பி காவல்துறையினரின் அலட்சியம் குறித்து செய்திகள் பரவின. ஊடகங்களில் இந்தச் செய்தியை பார்த்த பின்னரே தாய் கூறியபடி அந்த நபர் சச்சின் இல்லை என்பதும், அவர் தான் பீம் ஆர்மியின் தலைவர் வினய் ரத்தன் என்பதையும் உணர்ந்தனர்.

பின்னர் அதே இடத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த இடத்தில் இருந்து வினய் ரத்தன் தப்பித்து சென்றார். போலீஸ் மீண்டும் தேடுதல் வேட்டைத் துவங்கிய பிறகு, திங்கள் கிழமை வினய் ரத்தன் உள்ளூர் நீதிமன்றத்தின் தானாகவே சரணடைந்தார்.

இது குறித்து கேள்வி எழுப்பியபோது, “வினய் ரத்தனை இதுவரை பார்த்தது கூட கிடையாது. எனவே அவரை அடையாளம் காண இயலவில்லை.” என்று காவல்துறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உ.பி.யில் பிரபலமாக பேசப்பட்டு வரும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். கண் முன்னே இருக்கும் நபரையே கண்டு பிடிக்க இயலவில்லை என்றால், ஒளிந்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

×Close
×Close