குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராகப் பதவியேற்றார். 60 வயதான பூபேந்திர படேல், விஜய் ரூபானிக்கு பதிலாக செப்டம்பர் 2021-ல் முதல்வராக பதவியேற்றார். சமீபத்தில், அவர் பா.ஜ.க சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் ஆளுநரை சந்தித்து அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் காந்திநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான கட்லோடியா தொகுதியில் அதிகபட்சமாக 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திங்கள்கிழமை பதவியேற்ற புதியவர்கள் 17 பேர் கொண்ட பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில், 7 ஓபிசி அமைச்சர்கள் உள்ளனர்; நான்கு பட்டிதார் சமூக அமைச்சர்கள் உள்ளனர்; பழங்குடி சமூகத்திலிருந்து 2 பேர், பட்டியல் சாதி, பிராமணர், ஜெயின் மற்றும் ராஜ்புத் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் அமைச்சர்களாகி உள்ளனர்.
கேபினட் அமைச்சர்கள்
ருஷிகேஷ் படேல்
மெஹ்சானாவில் உள்ள சுந்தியா கிராமத்தைச் சேர்ந்த ருஷிகேஷ் படேல், சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர். கட்டுமானத் தொழிலுடன் தொடர்புடையவர். நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ள ருஷிகேஷ் படேல், மெஹ்சானா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவர் விஸ்நகர் விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் தீவிர உறுப்பினராக உள்ளார். ருஷிகேஷ் படேலின் விஸ்நகர் தொகுதி 2015-ல் செய்திகளில் இருந்தது. ஹர்திக் படேல் தலைமையில் பட்டிதார் சமூகத்தை ஓ.பி.சி பிரிவில் சேர்க்கக் கோரி நடந்த பட்டிதார் சமூக போராட்டம் வன்முறையாக மாறியது. ருஷிகேஷ் படேலின் அலுவலகத்தை தீ வைத்து சேதப்படுத்தினர். இவர் முன்பு சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மருத்துவக் கல்வி அமைச்சராக இருந்துள்ளார்.
ராகவ்ஜி படேல்
ஜாம்நகர் மாவட்டத்தில் இருந்து 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராகவ்ஜி லியுவா படேல் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1975-ல் காங்கிரஸில் சேர்ந்தார். 1985-ல் கேசுபாய் படேலுக்கு எதிராக ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கலவாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், அவர் பா.ஜ.க-வில் இணைந்து சுரேஷ் மேத்தா, ஷங்கர்சிங் வகேலா மற்றும் திலீப் பரிக் ஆகியோரின் ஆட்சியில் அமைச்சராக பணியாற்றினார். 1999-ல் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார். 2007 மற்றும் 2012 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2017-ல் இரண்டாவது முறையாக பா.ஜ.க-வுக்குத் திரும்பினார். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சட்டத்தில் பட்டம் பெற்றவர். விவசாயம் மட்டும் இல்லாமல் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்.
பல்வந்த்சிங் சந்தன்சிங் ராஜ்புத்
சித்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ,க வேட்பாளர் பல்வந்த்சிங் சந்தன்சிங் ராஜ்புத் 2017-ல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறினார். அவர் வியாபாரம், வர்த்தகம், விவசாயம் மற்றும் வாடகை ஆகியவை தனது வருமான ஆதாரங்களாக அறிவித்துள்ளார்.
குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா
கோலி சமூகத் தலைவரான குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா காங்கிரஸில் இருந்து விலகி 2018-ல் பா.ஜ.க-வுக்கு மாறினார். விஜய் ரூபானி அரசில் நீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் விஜய் ரூபானி ராஜினாமா செய்து, பூபேந்திர படேல் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதால், பவாலியா தனது அமைச்சரவை பதவியை இழந்தார். பவாலியா தனது 7வது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஜஸ்தானி தொகுதியில் இருந்து பா.ஜ.க-வுக்கு முதல் வெற்றியை அளித்துள்ளார்.
கனு தேசாய்
கனு தேசாய் ஒரு பட்டதாரி, ஆனவில் பிராமணர். இவர் வாபியில் யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் (யுபிஎல்) நிறுவனத்தின் உதவி மேலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஓய்வு பெறுவதற்கு முன்பு பொது மேலாளராக ஆனார். அரசாங்கத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் யு.பி.எல் நிறுவனத்தில் கார்ப்பரேட் விவகாரங்களின் இயக்குநராக இருந்தார். முதல் பூபேந்திர படேல் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தார். கனு தேசாய் 2008 முதல் பா.ஜ.க-வில் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பார்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
முலு பேரா
முலுபாய் ஹர்தாஸ்பாய் பேரா அல்லது முலு பேரா, தேவர்களின்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியாவில் இருந்து வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர். ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வியை தோற்கடித்து, கிட்டத்தட்ட 41% வாக்குகளைப் பெற்றார். பழைய போட்டியாளரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான விக்ரம்பாய் மடத்தையும் தோற்கடித்தார். 57 வயதான பேரா ஒரு வருடத்திற்கு முன்பு வரை குஜராத் கிராமப்புற வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக இருந்தார்.
தேர்தலின் போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்) நிறுவன விவகாரங்கள் இயக்குநரும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பியுமான பரிமள நத்வானி, திங்கள்கிழமை கம்பாலியாவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, முலுபேராவுடன் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
குபேர் திண்டோர்
குபேர் திண்டோர் செப்டம்பர் 2021 முதல் பூபேந்திர படேல் முதல் ஆட்சிக் காலத்தில் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, அறிவியல் மற்றும் சட்டமன்ற விவகாரங்களுக்கான மாநில அமைச்சராகப் பணியாற்றினார். மஹிசாகர் மாவட்டத்தின் சாந்த்ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. திண்டோர் சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அகமதாபாத்தில் உள்ள எல்.டி கலைக் கல்லூரியில் எம்.ஏ முடித்துள்ளார். இவர் சாந்த்ராம்பூரில் உள்ள கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புடையவர். இவர் தனது பிரமாணப் பத்திரத்தில், 2.3 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திண்டோரின் தனிப்பட்ட இணையதளம் அவரது மதிப்புகளை விவரிக்கிறது. அவை பா.ஜ.க-வுடன் ஒத்துப்போகின்றன. அதில், “பாரதிய ஜனதா கட்சி இந்துத்துவாவில் உறுதியாக உள்ளது, இந்திய சுதந்திர ஆர்வலர் விநாயக் தாமோதர் சாவர்க்கரால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்… இந்துத்துவா என்பது மேற்கத்தியமயமாக்கலுக்கு மேல் இந்திய கலாச்சாரத்தை ஆதரிக்கும் கலாச்சார தேசியவாதம், எனவே இது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து இந்தியர்களுக்கும் பரவுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பானுபென் பாபரியா
ராஜ்கோட் நகராட்சியின் உறுப்பினரான பாபரியா மூன்றாவது முறையாக ராஜ்கோட் கிராமப்புற (எஸ்சி) தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் 2007, 2012-ல் பா.ஜ.க-வால் கைவிடப்படுவதற்கு முன்பு இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு வருடங்கள் ஓரங்கட்டப்பட்ட பிறகு, ராஜ்கோட் நகராட்சித் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க இவருக்குச் சீட் கொடுத்ததைத் தொடர்ந்து வெற்றி பெற்றார். இவரது மாமனார் மதுபாய் பாபரியாவும் 1998-ல் இந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
ஹர்ஷ் சங்கவி
குஜராத் மாநில உள்துறை அமைச்சரான சங்கவி, மஜூரா தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்டு 1.16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இவர் சூரத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியின் மகன். இவர் 2010-ல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில பொதுச் செயலாளராகவும், 2017-ல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 2012 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநிலத்தில் பா.ஜ.க-வின் இளம் வேட்பாளராக இருந்தார். சங்கவி குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு நெருக்கமானவர்.
ஜெகதீஷ் விஸ்வகர்மா
பா.ஜ.க-வில் அகமதாபாத் பிரிவின் தலைவராக இருந்த ஜெகதீஷ் விஸ்வகர்மா, முந்தைய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். தொழில், வனம் மற்றும் சுற்றுச்சூழல், நெறிமுறை மற்றும் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர். நிகோல் தொகுதியில் காங்கிரஸின் ரஞ்சித்சிங் பரத்தை 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.
இணை அமைச்சர்கள்
புருஷோத்தம் சோலங்கி
பாவ்நகர் கிராமப்புற எம்.எல்.ஏ.வும், கோலி சமூகத்தின் முக்கிய தலைவருமான இவர், காங்கிரஸ் தலைவர் ரேவன்த்சிங் கோஹிலியை 73,484 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். நரேந்திர மோடி அரசாங்கத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த சோலங்கி, 2008ல் ரூ. 400 கோடி மீன்பிடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அவரது வாக்குமூலத்தில், அவர் தனது தொழில் விவசாயி மற்றும் டெவலப்பர் என்று பட்டியலிட்டுள்ளார். அவர் மீது காந்திநகரில் ஒரு ஊழல் வழக்கு உட்பட மூன்று குற்ற வழக்குகள் உள்ளன.
பச்சுபாய் கபாத்
கபாத் தேவ்கத் பரியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதற்கு முன்பு 2014-ல் ஆனந்திபென் படேல் அமைச்சரவையில் மீன்வளம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். கபாத் ஆம் ஆத்மி கட்சியின் பாரத்சிங் வகாலாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தற்செயலாக, வகாலா 2017-ல் கபாத்திற்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். பின்னர், 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தனக்கு 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கபாத் அறிவித்துள்ளார்.
முகேஷ் படேல்
சூரத் மாவட்டத்தில் உள்ள ஒல்பாட் தொகுதி எம்.எல்.ஏ-வான முகேஷ் படேல் கோலி படேல் சமூகத்தை சேர்ந்தவர். விவசாயி மற்றும் ஒப்பந்ததாரரான இவர், 2007-ல் முன்னாள் ஒல்பாட் பா.ஜ.க எம்.எல்.ஏ கிரித்பாய் படேலின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தார். பா.ஜ.க துரத் எம்பி மற்றும் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சரான தர்ஷனா ஜர்தோஷ் உடனான நெருக்கம் காரணமாக, 2012-ல் ஒல்பாட் தொகுதியில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார். 2017-ல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
குன்வர்ஜி ஹல்பதி
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கோட்டையாக இருந்த மாண்ட்வி தொகுதியில் குன்வர்ஜி ஹல்பதி இந்த ஆண்டு வெற்றி பெற்றார். ஹல்பதி, மாண்ட்வியின் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். முன்னதாக சூரத் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவர் டாக்டர் துஷார் சவுத்ரிக்கு (யு.பி.ஏ அரசாங்கத்தின் முன்னாள் மத்திய அமைச்சர்) நெருக்கமாக இருந்தார். இவருக்கு 2007-ல் பர்தோலியில் இருந்து சீட் கொடுக்கப்பட்டு அந்த இடத்தில் வென்றார்.
பிக்குசின் பார்மர்
வடக்கு குஜராத்தில் உள்ள ஆரவல்லி மாவட்டத்தின் மொடாசா தொகுதியில் முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிக்குசின் பார்மர், காங்கிரஸின் சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேந்திரசிங் தாகூரை 34,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். பார்மர் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது பிரமானப் பத்திரத்தில், அவரது தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
பிரஃபுல் பன்சேரியா
சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த பிரஃபுல் பன்சேரியா, சூரத்தில் ஊடக விளம்பரம் மற்றும் ரியல் எஸ்டேட் வணிகங்களை நடத்தி வருகிறார். லியுவா பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த இவர் நீண்ட காலமாக பா.ஜ.க-வில் உள்ளார். முன்னாள் நகராட்சி கவுன்சிலரான இவர், 2012-ல் காம்ரேஜ் தொகுதியில் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2017-ல் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஆனால் பிரஃபுல் பன்சேரியா கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தார். யங் குஜராத் கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2022-ல் மீண்டும் காம்ரேஜ் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.