/indian-express-tamil/media/media_files/2025/03/11/EGO2r8VW8aNfdrQY5J74.jpg)
பீகார் தனியார் நகைக் கடையில் பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த 6 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் அர்ரா பகுதியில் தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கடை திறக்கப்பட்டுள்ளது. அப்போது சிறிது நேரத்திலேயே, வாடிக்கையாளர்கள் போல் 2 மர்ம நபர்கள் கடைக்கு வந்தனர். நுழைவாயிலில் நின்றிருந்த காவலர்களிடம், மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறித்து கொண்டனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 6 armed men, bags full of jewellery, a high-speed chase and a shootout: Inside Rs 25-crore heist in Bihar’s Ara
அந்த நேரத்தில் மேலும் 4 மர்ம நபர்கள் நகைக்கடைக்குள் புகுந்தனர். அனைவரின் கைகளிலும் கைத் துப்பாக்கிகள் இருந்தன. துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்களை பார்த்ததும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் செய்வது அறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனையடுத்து, நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். நகைக்கடையின் ஷட்டர்களை மூடிய மர்ம நபர்கள், கடையின் ஊழியர்களிடம் இருந்து செல்போன்களை பறித்தனர். பின்னர் அவர்களை தனி அறையில் வைத்து பூட்டினர். கடையின் இரு தளங்களில் இருந்த நகைகளை பெரிய பைகளில் நிரப்பிக் கொண்டு 3 மோட்டார் சைக்கிள்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடையின் பாதுகாவலர் மனோஜ் தாக்கூர் பேசுகையில், "அவர்களை வாடிக்கையாளர்கள் என்றுதான் நினைத்தேன், அவர்கள் ஜோடியாக உள்ளே நுழைந்தனர். 6-வது நபர் உள்ளே வந்தபோது, அவர் என் தலையில் ஒரு துப்பாக்கியைக் காட்டி என்னைத் தாக்கிவிட்டு என்னிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் சென்றார்.ஷட்டர்களைப் பூட்டிவிட்டு, சுமார் அரை மணி நேரம் ஷோரூமை சூறையாடினர். ஷோரூமுக்குள் இருந்த ஊழியர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்." என்று கூறினார்.
கடை மேலாளர் மிருதுஞ்சய் கூறுகையில், "கொள்ளையர்கள் அனைவரின் தொலைபேசியையும் பறிமுதல் செய்தனர். ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளைத் தவிர, பணமும் எடுத்துச் செல்லப்பட்டதாகக் தெரிகிறது. திருடப்பட்ட பணத்தின் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படுகிறது" என்றார்.
இதனிடையே, தனியார் நகைக் கடையில் பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த 6 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரட்டி சென்ற போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், தற்காப்புக்காக போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளில் இருவரின் கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய 4 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.