Bihar assembly elections 2020 Prashant Kishor : வருகின்ற 2020ம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் “வருகின்ற தேர்தலில் பாஜகவை விட அதிக இடங்களில் ஜே.டி.யு போட்டியிடும்” என்று கூறியுள்ளார். பீகாரில் தற்போது பாஜக மற்றும் ஜே.டி.யு கட்சியினர் கூட்டணியில் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் பிரசாந்த் கிஷோரின் இந்த கருத்தால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது.
அம்மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தன்னுடைய கண்டனங்களை மறைமுகாக ட்விட்டரில் வைத்துள்ளார். ஜே.டி.யு கட்சியின் ராஜ்யசபை எம்.பி. ஆர்.சி.பி. சிங் இது குறித்து கூறும் போது “ஒரு சிலர் தற்போது என்ன பிரச்சனை நடந்தாலும் உடனே கருத்து சொல்கின்றேன் என்று கிளம்பிவிடுகின்றார்கள். நான் அவர்களை பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. ஆனால் இது போன்ற கருத்துகளை முதிர்ச்சி தன்மையில்லாமல் வெளிப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுஷில் குமார் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வருகின்ற 2020ம் ஆண்டு தேர்தலின் போது மோடி மற்றும் நிதிஷ் குமார் தலைமையில் கூட்டணியாக போட்டியை எதிர்கொள்வார்கள். அவர்கள் தான் சீட்கள் குறித்து முக்கிய முடிவினை எட்டுவார்கள். ஆனால் ஒரு சிலரோ எந்த சித்தாந்தமும் இல்லாமல் அரசியல் சேர்ந்து அதே நேரத்தில் தன்னுடைய நிறுவனத்திற்காக டேட்டாக்களை சேகரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தொழில் தான் முதலில். நாடு பின்பு தான் என்று பெயர் குறிப்பிடாமல் கண்டனங்களை பதிவு செய்தார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
மேலும் என்.ஆர்.சி குறித்தும், சி.ஏ.ஏ குறித்தும் பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்துகளை தாக்கும் விதமாக, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் அது என்.பி.ஆர் போன்ற விவகாரங்களை பலவீனமாக்கும், எதிர்கட்சிகளை வலிமையாக்கும், வெளிநாடுகளில் மோடியின் மதிப்பை சீர் குழைக்கும், இதனால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பமாட்டார்கள், இதனால் யார் லாபம் அடைவார்கள்? நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிலர் அரசியல்வாதிகளை கையில் வைத்துக் கொண்டு அவர்களின் தொழிலை சிறப்பாக நடத்துகிறார்கள் என்றும், இது போன்ற ஆட்களை மக்கள் நன்றாக அறிவார்கள் என்றும் சுஷில் குமார் மேலும் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக தன்னுடைய திட்டவட்டமான எதிர்ப்பினை பதிவு செய்தார் கிஷோர். அதே நேரத்தில் நிதிஷ் குமாரும் பிகார் மாநிலத்தில் என்.ஆர்.சியை செயல்படுத்தமாட்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.