New Update
/
பீகாரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க 4000 இடங்களில் வெல்லும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பீகாரின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இந்தநிலையில், பீகாரின் நவாடா பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் நிதிஷ்குமார் 25 நிமிடங்கள் பேசினார். நிதிஷ்குமார் பேசி முடித்து அமர வந்த போது பிரதமர் மோடி அவரிடம், "இவ்வளவு நல்ல பேச்சை நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்.. இதற்கு மேல் நான் பேசுவதற்கு எதுவும் இல்லை" என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் நிகழ்ச்சியில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு நிதிஷ்குமார் வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், நிதிஷ்குமாரின் பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலானது. நிதிஷ்குமார் பேசும் போது, "வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கே பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் 4000 தொகுதிகளில் வெல்லும்" என்று கூறினார். அதிலும் முதலில் நிதிஷ்குமார் 4 லட்சம் எம்.பி.,க்கள் எனக் கூற வந்தார். பின்னர் சமாளித்து 4000 எம்.பி.,க்கள் என்று கூறினார்.
நமது நாட்டில் மொத்தமே 543 லோக்சபா தொகுதிகள் தான் உள்ளன. அதில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை பா.ஜ.க தனது டார்கெட்டாக வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் 400 என்று சொல்ல வந்த நிதிஷ்குமார் 4000 எம்.பி.,க்கள் என பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் 25 நிமிடங்கள் பேசினார். இது கிட்டதட்ட அனைவரையும் பொறுமையிழக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் மேடையின் முன் வரிசையில் அமர்ந்த ஜே.டி.யு.,வின் மூத்த தலைவர் விஜய் குமார் சவுத்ரி, தனது கடிகாரத்தைக் காட்டி பேச்சை முடிக்குமாறு நிதிஷ்குமாருக்கு சைகை காட்டினார். பல தலைவர்கள் நிதிஷ்குமார் எப்போ தான் பேச்சை முடிப்பார் என எழுந்து நின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.