தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொள்ள, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்க்கு அனுப்பப்பட்ட சிறப்பு விமானம் குறித்து பீகார் பா.ஜ.க விமர்சித்துள்ள நிலையில், அதானி விமானத்தை தான் பயன்படுத்தவில்லை என தேஜஸ்வி யாதவ் பா.ஜ.க.,வை கிண்டல் செய்துள்ளார்.
மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க, அவர் அனுப்பிய சிறப்பு விமானத்தில் (VT-SSK) தேஜஸ்வி யாதவ், RJD ராஜ்யசபா உறுப்பினர் மனோஜ் ஜாவுடன் சென்னை வந்தார். பின்னர் அதேநாளில் 11 மணிக்கு பாட்னா திரும்பினார்.
இதையும் படியுங்கள்: வடகிழக்கில் மோடியின் பிணைப்பும் ராகுலின் துண்டிப்பும்; காங்கிரஸின் தோல்விக்கு வித்திட்ட ராய்ப்பூர் முடிவு
இந்தநிலையில், பீகார் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பா.ஜ.க மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் இடையே இதுதொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க உறுப்பினர்கள் தமிழகத்தில் பீகாரி தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தை தாக்கினர். சபையின் நடுப்பகுதிக்கு வந்து சலசலப்பை உருவாக்கினர். அப்போது பல பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் செய்தியாளர்களின் மேசையை சேதப்படுத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி உத்தரவிட்டார்.
துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை தாக்கி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா, “பீகார் தொழிலாளர்களை திரும்பக் கொண்டுவர பீகார் அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பீகாரி தொழிலாளர்கள் தாக்கப்படும் நிலையில், தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்ட துணை முதல்வர் சிறப்பு விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார். கேக் வெட்டுதல், சிறப்பு விமானத்தை பயன்படுத்துதல் என்று இல்லாமல், சென்னைக்கு விசாரணைக் குழுவை அரசு அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.
அப்போது தேஜஸ்வி யாதவ் எழுந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மறைமுக தாக்குதல் நடத்தும் வகையில், "நான் அதானியின் விமானத்தைப் பயன்படுத்தவில்லை, நான் சொல்வதைக் கேட்கிறீர்களா, நான் அதானியின் விமானத்தை சென்னைக்குச் செல்ல பயன்படுத்தவில்லை" என்று கூறினார்.
அதானி குழுமம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதிலிருந்து, பிரதமர் மோடி, அதானியின் விமானத்தில் பயணம் செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் வீடியோ செய்தியையும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டு, பீகாரி தொழிலாளர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று வலியுறுத்தினார்.
“மாநிலங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்துவதில் பா.ஜ.க தலைவர்கள் தலைசிறந்தவர்கள். ஒருபுறம், பாரத் மாதா கி ஜே என்று கூக்குரலிடுகிறார்கள், மறுபுறம், தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பது போல, மாநிலங்களுக்கு இடையே வெறுப்பை உருவாக்குகிறார்கள், ”என்று தேஜஸ்வி யாதவ் சட்டமன்றத்தில் கூறினார்.
“அப்படி ஏதேனும் (தொழிலாளர்கள் மீதான தாக்குதல்) சம்பவம் நடந்தால், மாநில அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். பீகார் தலைமைச் செயலர் மற்றும் தலைமைக் காவல்துறை இயக்குநருக்கு தமிழக அதிகாரிகளுடன் பேசுமாறு நமது முதல்வர் நிதிஷ்குமார் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். எனவே, சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தி என்ன பயன்? எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இவ்வளவு பொறுமையற்று இருக்கிறார்?” என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பினார்.
தேஜஸ்வி யாதவுக்கும் பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே இந்த வார்த்தைப் போர் நடந்து கொண்டிருந்தபோது, முதல்வர் நிதிஷ்குமார் அவையில் இல்லை. அவரது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், முதல்வர் பின்னர் அமர்வில் சேர்ந்தார்.
“தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் தேஜஸ்விக்கு அழைப்பு விடுத்தார், அதன்பேரில் அவரது பிறந்தநாளில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அவரது பயணத்தை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புபடுத்துகின்றன. இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் அதை தொடர்புபடுத்தி அரசியல் மைலேஜை உருவாக்க விரும்புகின்றன,” சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி கூறினார்.
இதற்கிடையில், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பீகாரி தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.