பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவில், நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் மகா கூட்டணி கட்சித் தலைவர்கள், தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். “இது 20 -20 ஆட்டம் போன்றது. ஆட்டத்தின் கடைசி பந்து வீசப்பட்ட பின்புதான் களம் முடிவு செய்யப்படும் ” என்று ஆர்ஜேடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி தெரிவித்தார்.
பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் டைகர், "இரட்டை இயந்திர சக்தியின் கீழ் பாஜக-ஜேடியு கூட்டணி செயல்பட்டது. மக்கள் ஆசியுடன் மத்தியிலும், மாநிலத்திலும் தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆட்சி செயல்படுகிறது. பீகார் மாநிலத்தின் அபரிமித வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நிதீஷ் குமாரும் இணைந்து பாடுபடுவார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். எனவே, அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
பீகாரில் காங்கிரஸ் கட்சி தனது இருத்தலை தக்கவைக்க போராடி வருகிறது. பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கூறுகையில் " தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக மாறும். நாங்கள் மிகவும் பின் தங்கியிருக்கவில்லை" என்று தெரிவித்தார்.
நிதீஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ஐக்கிய ஜனதா தளக்கட்சித் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்" பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநயாகக் கூட்டணி போட்டியிட்டது. நிதிஷ்குமார் குமார் தலைமையில் தான் அடுத்த ஆட்சி அமையும். எதிர்கட்சிகளுக்கு மக்களுக்கு சேவையாற்றும் கொள்கை எதுவும் கிடையாது, அவர்கள் வாக்காளர்களை தவறாக வழிநடத்தினர்" என்று சிங் செய்தியாளர்களிடம் கூறினார். ஆட்சியை கைப்பற்றப்போவது பாஜகவா? ஐக்கிய ஜனதா தளமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் இந்த கேள்வியை தெளிவுபடுத்தியுள்ளனர்" என்று சிங் தெரிவித்தார்.
கூட்டணியில் எந்த கட்சி அதிக இடங்களைப் பிடித்திருந்தாலும், நிதிஷ்குமார் முதல்வராக திரும்புவார் என்ற வாக்குறுதியை பாஜக உறுதிப்படுத்தும் என்று அக்கட்சித் தலைவர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.