பாட்னாவில் நடந்த கூட்டத்தில் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சி தலைவராக ஜே.டி (யு) தலைவர் நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அவர் தொடர்ந்து நான்காவது முறையாக பீகார் முதல்வராகிறார். பாஜகவின் சுஷில் மோடி துணை முதல்வராக உள்ளார். இதையடுத்து, பீகாரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் பாகு சவுகானிடம் என்.டி.ஏ செல்கிறது.
இந்த கூட்டத்தில் ஜே.டி (யு), பாஜக, எச்.ஏ.எம் (எஸ்) மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி) ஆகிய கட்சிகளின் என்.டி.ஏ தலைவர்கள் கலந்து கொண்டனர். நிதிஷ் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து மாநில சட்டசபையை கலைக்க பரிந்துரைத்து ஆளுநரிடம் கடிதம் ஒப்படைத்த நாட்களுக்குப் பிறகு இந்த கூட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பாட்னாவில் மாநில கட்சி தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நிதிஷ் குமாரை விமர்சனம் செய்த ஆர்.ஜே.டி தலைவர் மனோஜ் ஜா, மக்களின் ஓட்டு அவருக்கு எதிரானது என்று கூறினார். “40 இடங்களைப் பெற்ற ஒருவர் எவ்வாறு முதல்வராக முடியும்? மக்களின் ஓட்டு அவருக்கு எதிரானது. அவர் தோல்வியடைந்துவிட்டார். அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். பீகார் உடனடியாக ஒரு மாற்றைக் கண்டுபிடிக்கும். அதற்கு ஒரு வாரம், 10 நாள் ஆகலாம். ஆனால், அது நடக்கும்” என்று கூறினார்.
பீகார் மாநிலத்தில் உள்ள மொத்தம் 243 மன்றத் தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 122 இடங்களைப் பிடித்தது. அதில், பாஜக 74 இடங்களுடன் அதிக இடங்களைப் பிடித்த பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜே.டி (யு) 43 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. கூட்டணி கட்சிகளான வி.ஐ.பி, எச்.ஏ.எம் (எஸ்) இந்த தேர்தலில் தலா 4 இடங்களைப் பெற்றன. இதன் மூலம் என்.டி.ஏ மொத்தம் 125 இடங்களைப் பெற்றுள்ளது.
தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்பே ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிதீஷ், ஜே.டி.(யு)வின் சரிவைக் கண்டதையடுத்து முதல்வர் பதவியில் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தினார் என்று ஏற்கெனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது. இருப்பினும், பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரை முதல்வராக தொடர வற்புறுத்தி, அரசாங்கத்தை நடத்துவதில் முன்பு போலவே முழு சுதந்திரமும் இருக்கும் என்று அவருக்கு உறுதியளித்தனர்.
இந்த முறை ஜே.டி.யுவின் எண்ணிக்கை 71-ல் இருந்து 43 ஆக குறைந்தது. 2005 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி வெற்றி பெற்ற மோசமான எண்ணிக்கை ஆகும்.
சிராக் பாஸ்வானும் அவருடைய எல்.ஜே.பி கட்சியும் ஜே.டி.யு-வை காயப்படுத்திய விதத்தில் நிதீஷ் மிகவும் வருத்தப்பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “சிராக் குறைந்தபட்சம் 25-30 இடங்களில் ஜே.டி.யு-வின் வெற்றி வாய்ப்புகளை கெடுத்துவிட்டார் என்று அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பாஜக இப்போது கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருந்தாலும் நிதீஷை முதல்வராக இருக்குமாறு நாங்கள் அவரை வற்புறுத்தினோம்.” என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"